எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில சுத்தம் செய்யப்பட்டுவிட்டன. குறிப்பாக சிங்கப்பூரின் தென்பகுதி கடல்நீர் வட்டாரத்திலும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா மற்றும் தானா மேராவின் பெரும்பாலான இடங்களிலும் சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதன்கிழமை (ஜூன் 19) மாலை 5 மணி நிலவரப்படி செயின்ட் ஜான்ஸ் தீவு, லாசரஸ், கூசு தீவுகளில் எண்ணெய் படிந்த மணற்பகுதிகள் சுத்தமாகிவிட்டதாக வியாழக்கிழமை (ஜூன் 20) அதிகாரிகள் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
நாடளாவிய சுத்திகரிப்புப் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.
ஜூன் 14ஆம் தேதி எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பாசிர் பாஞ்சாங் கொள்கலன் முனையத்தின் வடக்குப் பகுதியிலும் எண்ணெய்ப் படிமங்கள் அகற்றப்பட்டுவிட்டன.
நெதர்லாந்து கொடி தாங்கிய தூர்வாரிக் கப்பல் ஒன்று அந்த முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் மீது அந்த முனையத்தில் மோதியதன் விளைவாக 400 டன் எரிபொருள் எண்ணெய் கடலில் கொட்டியது.
செந்தோசாவில் உள்ள சிலோசோ கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளிலும் தேங்கிய எண்ணெய்யும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, தானா மேரா வட்டார கடற்கரை பகுதிகளிலும் சிந்திய எண்ணெய் அகற்றப்பட்டுவிட்டதாக அந்தச் சம்பவத்தைக் கையாண்டு வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், செந்தோசா வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிங்கப்பூர் நில ஆணையம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
மிச்சம் மீதியுள்ள எண்ணெய்யில் அலைகள் இன்னும் வீசக்கூடும் என்பதால் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா மற்றும் தனா மேரா கடற்கரை பகுதிகளில் அவற்றைச் சுத்தப்படுத்த கூடுதல் பணி மேற்கொள்ளப்படலாம் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

