மற்ற கைதிகளின் விவரங்களைப் பெற அதிகாரிகளைத் தூண்டிய கைதி

2 mins read
15 ஆண்டு சிறைக்கைதிக்கு மேலும் 15 மாத சிறை!
88b7fe0a-3fdb-486e-a129-12a35df6940b
கைதிக்கு உதவிய இரண்டு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறையில் உள்ள இதர கைதிகளின் விவரங்களைப் பெற இரண்டு சிறை அதிகாரிகளைத் தூண்டிய குற்றத்திற்காக 38 வயது சிறைக் கைதிக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அப்துல் கரிம் முகம்மது கப்பை கான் எனப்படும் அவர் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக ஏற்கெனவே 15 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

வியாழக்கிழமை (ஜூன் 20) விதிக்கப்பட்டு உள்ள 15 மாதத் தண்டனைக் காலம் ஏற்கெனவே அனுபவித்து வரும் சிறைவாசம் முடிந்த பின்னர் தொடங்கும்.

தகாத கணினிப் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் புரிந்த குற்றங்களை அப்துல் கரிம் கடந்த மே மாதம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது.

சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் 15 ஆண்டு காலத்திற்கு எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்ற தடையும் அப்துல் கரிமுக்கு விதிக்கப்பட்டு உள்ளது.

2020 ஜனவரி முதல் ஜூன் வரை ஐந்து முறை சிறை அதிகாரி முகம்மது ஃபட்டாஹுல்லா முகம்மது நூர்தினிடம் இதர கைதிகளின் வீட்டு முகவரிகளைக் கேட்டார். சிங்கப்பூர் சிறைத் துறை கணினியில் உள்ள தகவல்களை அப்துர் கரிமிடம் அந்த அதிகாரி பகிர்ந்துகொண்டார்.

2020 அக்டோபர் 13ஆம் தேதி மற்றோர் அதிகாரி முஹம்மது ஸுல் ஹெல்மி அப்துல் லத்திப்பை அணுகி இதர இரண்டு கைதிகளைப் பற்றிய சில தனிப்பட்ட விவரங்களைத் தருமாறு கேட்டார். அவரும் அந்தத் தகவல்களை சிறைத் துறை கணினியில் இருந்து எடுத்துக் கொடுத்தார். அவற்றை ஒரு தாளில் அப்துல் கரிம் குறித்துக்கொண்டார்.

சிறைக்கைதிக்கு உதவிய அவ்விரு அதிகாரிகள் மீதும் 2021 நவம்பரில் குற்றம் சாட்டப்பட்டது. தற்போது அவர்கள் அந்தப் பதவியில் இல்லை.

2022 ஆகஸ்ட் மாதம் ஃபட்டாஹுல்லாவுக்கு 10 வாரச் சிறைத் தண்டனையும் ஹெல்மிக்கு 2022 செப்டம்பர் மாதம் ஏழு வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்