யூரோ 24: ஒளிபரப்பில் இடையூறு, ரசிகர்கள் வருத்தம்

2 mins read
a87d4187-b988-4493-b725-5d1cb4315cd5
ஜெர்மனிக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான ஆட்டத்தின் ஒளிபரப்பில் இடையூறுகள் ஏற்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

சிங்கப்பூரில், யூரோ 24 காற்பந்துப் போட்டியில் ஜெர்மனியும் ஹங்கேரியும் மோதிய ஆட்டத்தின் ஒளிபரப்பில் இருமுறை இடையூறு ஏற்பட்டது.

அதனால் இங்குள்ள ரசிகர்களால் ஆட்டத்தின் சில தருணங்களைக் கண்டுகளிக்கமுடியாமல் போனது.

ஆட்டத்தின் முற்பாதியில் ஏற்பட்ட இடையூறால் பல ஸ்டார்ஹப், சிங்டெல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது, “ஒளிபரப்பில் இடையூறு. படத்தை அனுப்பும் இடத்தில் கோளாறு. கூடுமானவரை விரைவில் ஒளிபரப்பைச் சரிசெய்ய எங்கள் பங்காளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அசெளகரியத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” ஆகிய வாக்கியங்கள் ஆங்கிலத்தில் திரையில் காட்டப்பட்டன.

இடையூறு சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது. அதனால் ஆட்டத்தில் ஜெர்மனி போட்ட முதல் கோலை ரசிகர்கள் காணமுடியாமல் போனது. 22வது நிமிடத்தில் ஜமால் முசியாலா அந்த கோலைப் போட்டார்.

பிற்பாதியாட்டத்தின் இறுதிப் பகுதியிலும் இதேபோன்ற ஒளிபரப்பு இடையூறு ஏற்பட்டது. அது ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

இந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது யூரோ 24 போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனி. வெற்றியைத் தொடர்ந்து அந்த அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவது உறுதியானது.

ஒளிபரப்பு இடையூறுகளால் ஆத்திரைமடைந்த காற்பந்து ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர். சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் காற்பந்து ரசிகர்கள் நூற்றுக்கணக்கான கருத்துகளைப் பதிவிட்டனர்.

யூரோ 24 போட்டியைக் காணக் கட்டணமாக அதிக தொகையை வழங்கியபோதும் இத்தகைய இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியதை எண்ணிக் கோபமடைந்ததாக சிலர் பதிவிட்டனர். சுமார் அரை மணிநேரத்துக்கான விளையாட்டைக் காண முடியாததோடு ஒரு கோலையும் பார்க்கமுடியாதது குறித்து வேறு சிலர் வருத்தம் தெரிவித்தனர்.

யூரோ 24 போட்டியின் அனைத்து 51 ஆட்டங்களும் ஸ்டார்ஹப், சிங்டெல், மீடியாகார்ப்பின் மீவாட்ச் ஆகிய தளங்களில் ஒளிபரப்பப்படுகின்றன. தொடக்கத்திலேயே விண்ணப்பித்த வாடிக்கையாளர்கள் 88 வெள்ளியையும் பிறகு விண்ணப்பித்தோர் 108 வெள்ளியையும் கட்டணமாகச் செலுத்தினர்.

அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூரில் காற்பந்து ரசிகர்கள் பலமுறை ஒளிபரப்பு இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்