கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
ஜூன் ஐந்தாம் தேதி நடைபெற்ற கடந்த சிஓஇ ஏலக்குத்தகை நடவடிக்கையின்போது கார்களுக்கான கட்டணங்கள் குறைந்திருந்தன.
ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற ஆக அண்மைய சிஓஇ ஏலக்குத்தகை நடவடிக்கையில் சிறிய கார்கள், சிறிய மின்சார வாகனங்களுக்கான ஏ பிரிவில் கட்டணம் ஆக அதிகமாகக் கூடி 90,889 வெள்ளியாகப் பதிவானது. முன்பு பதிவான 88,200 வெள்ளியைக் காட்டிலும் இது மூன்று விழுக்காடு அதிகமாகும்.
பெரிய கார்கள், பெரிய மின்சார வாகனங்களுக்கான பி பிரிவிலும் சிஓஇ கட்டணம் அதிகரித்தது. கட்டணம் 1.7 விழுக்காடு அதிகரித்து 102,334 வெள்ளியாகப் பதிவானது.
மோட்டார்சைக்கிள்களுக்கான டி பிரிவில் கட்டணம் 13 வெள்ளி கூடி 9,002 வெள்ளியாகப் பதிவானது.
மோட்டார்சைக்கிள்களைத் தவிர எந்த வாகனமும் இடம்பெறக்கூடிய இ பிரிவில் சிஓஇ கட்டணம் 1.6 விழுக்காடு குறைந்து 101,600 வெள்ளியாகப் பதிவானது.
வர்த்தக வாகனங்களுக்கான சி பிரிவிலும் சிஓஇ கட்டணம் குறைந்தது. இப்பிரிவில் கட்டணம் 70,589 வெள்ளியிலிருந்து குறைந்து 69,900 வெள்ளியாகப் பதிவானது.

