இந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் காணவிருக்கும் 14 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீவக வீட்டுத் திட்டங்கள் பேஷோரிலும் கெம்பங்கான் ஒருங்கிணைந்த மேம்பாட்டு வட்டாரத்திலும் அமையும். மேலும் பேஷோரில் அமையும் முதல் வீவக வீடுகள் அவையாகும்.
காலாங்/வாம்போ வட்டார பிடிஓ முன்னோடித் திட்டம் புதிய வெண்ணிற வீடு என்னும் முறையின்கீழ் தடுப்புச்சுவர் இல்லாத வீடுகளைக் கொண்டிருக்கும்.
மேலும், செங்காங்கில் உள்ள புதிய வீடமைப்புப் பகுதியில் முதல் மேம்பாட்டையும் கேலாங்கில் சமூகப் அடுக்குமாடி வீடுகளையும் அந்த பிடிஓ திட்டங்கள் உள்ளடக்கும்.
அக்டோபர் மாதம் முதல், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புதிய வீடுகள் பிரைம், பிளஸ் அல்லது ஸ்டாண்டர்ட் என்னும் புதிய வகைகளைக் கொண்டு இருக்கும்.
தற்போதைய வீவக வீடுகள் முதிர்ச்சியடைந்தவை, முதிர்ச்சியடையாதவை என்று வகைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் நடப்பில் உள்ள இந்த வகைப்பாடு அக்டோபரில் விடைபெறும்.
அக்டோபர் மாதம் விற்பனைக்கு வர உள்ள 14 பிடிஓ திட்டங்களைப் பற்றிய விவரங்கள் வீவக இணையத்தளத்தில் ஜூன் 19ஆம் தேதி வெளியிடப்பட்டன. இவ்வாண்டுக்கான இறுதி பிடிஓ விற்பனை நடவடிக்கை அது.
அங் மோ கியோ, பிடோக், புக்கிட் பாத்தோக், கேலாங், ஜூரோங் வெஸ்ட், காலாங்/வாம்போ, பாசிர் ரிஸ், செங்காங், உட்லண்ட்ஸ் வட்டாரங்களில் 8,500 வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.
தொடர்புடைய செய்திகள்
தேர்வு செய்யப்பட்ட இடங்களில் பிரைம், பிளஸ் என்னும் வகைப்படுத்தப்பட்ட பிடிஓ வீடுகள் இடம்பெறும்.
இவற்றுக்கான மறுவிற்பனை நிபந்தனைகள் கடுமையாக இருக்கும். குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் (எம்ஓபி) 10 ஆண்டு என்பது இந்த வீடுகளுக்குப் பொருந்தும்.
பிரைம், பிளஸ் மறுவிற்பனை வீடுகளை வாங்குவோருக்கு வருமான உச்சவரம்பு பொருந்தும். தற்போது அந்த வரம்பு மாதம் $14,000 என்று உள்ளது.
அதேநேரம் ஸ்டாண்டர்ட் என்று வகைப்படுத்தப்பட்ட வீடுகள் ஐந்தாண்டு குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் என்னும் நிபந்தனையைக் கொண்டிருக்கும். மறுவிற்பனையில் இந்த வீடுகளை வாங்குவோருக்கு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது.
பிடோக் நகரின் விரிவாக்கமான பேஷோரில் அமையும் இரு பிடிஓ திட்டங்களில் 1,440 வீடுகள் இருக்கும். இந்தத் திட்டங்கள் பிளஸ் என்னும் வகையின்கீழ் இடம்பெறக்கூடும் என்று சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் கூறினர்.

