விலங்குத் துன்புறுத்தல் சிங்கப்பூரில் 12 ஆண்டுகளில் காணாத உச்சம்

2 mins read
விலங்குகளுக்குக் குரல்கொடுக்கும் மாநாடு
ca393450-882a-40d1-96eb-1a227a2c289c
சிங்கப்பூர் விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) முதன்முறையாக நடத்தும் ‘குரல் (VOICE)’ எனும் மூன்று-நாள் மாநாடு. - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூரில் விலங்குத் துன்புறுத்தல், நலன் தொடர்பான சம்பவங்கள் 12 ஆண்டுகளில் காணாத உச்சம் தொட்டுள்ளது.

இந்நிலையைச் சரிசெய்ய சிங்கப்பூர் விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) முதன்முறையாக நடத்தும் ‘குரல்’ எனும் மூன்று நாள் மாநாடு, வியாழக்கிழமை (ஜூன் 20) நீ சூன் ஈஸ்ட் சமூக மன்றத்தில் தொடங்கியது.

எட்டு நாடுகளிலிருந்து பிரதிநிதிகளும் பல்வேறு உள்ளூர் விலங்கு நல அமைப்புகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டன.

தேசிய வளர்ச்சி மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தேசிய வளர்ச்சி மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தேசிய வளர்ச்சி மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: ரவி சிங்காரம்

“விலங்குகளைத் துன்புறுத்தும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடுதலானோர் தங்கள் செல்லப்பிராணிகளைப் பராமரிக்க முடியாமல் காப்பகங்களிடம் கொடுத்து விடுகின்றனர்.

“சிங்கப்பூரில் உள்ள பல காப்பகங்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. ஆனால், அவற்றிலிருந்து செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்கும் விகிதம் 40% குறைந்துள்ளது. பலரும் செல்லப்பிராணிகளைப் புதிதாக வாங்கவே விரும்புகின்றனர்,” என சில சவால்களை எடுத்துக்கூறினார் எஸ்பிசிஏ நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர்.

தத்தெடுக்கும் விகிதம் 40% குறைந்துள்ளது. பலரும் செல்லப்பிராணிகளைப் புதிதாக வாங்கவே விரும்புகின்றனர்.
 எஸ்பிசிஏ நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர்

“விலங்கு நலம் குறித்து சிங்கப்பூரில் பல சட்ட திட்டங்கள் உள்ளன. அவற்றை மேம்படுத்த அரசாங்கம் அனைத்துப் பங்காளிகளையும் ஒருங்கிணைத்து, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரும்புகிறது,” என்றார் திரு டான்.

குறிப்பாக, விலங்கு நல அமைப்புகள், கால்நடை மருத்துவர்கள், இனப்பெருக்கம் செய்வோர் போன்றவர்கள் முக்கியப் பங்காளிகள் என்பதைச் சுட்டிய அவர், அவர்களை ஒன்றாகச் சேர்ந்து செயல்பட ஊக்குவித்தார்.

அடுத்ததாக, ‘ஏக்கர்ஸ்’ எனும் விலங்கு நல ஆய்வு, கல்விச் சங்கத்தை 2001ல் தொடங்கிய நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் சிறப்புரையாற்றினார்.

புகைப்படங்களுக்காக தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குரங்கு துன்புறுத்தப்பட்டதைக் கண்டபோது தொடங்கிய அவரது பயணம், இன்றும் நாடாளுமன்றத்தில் தொடர்கிறது. விலங்குத் துன்புறுத்தலுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்க அவர் போராடுகிறார்.

அதைத் தொடர்ந்து திரு இங், ‘ப்ரோ போனோ எஸ்ஜி’யின் பிரதிநிதித்துவப் பிரிவுத் தலைவரான வழக்கறிஞர் சாதனா ராய், பார்வையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அதை வழிநடத்தினார் ஆர்த்தி.

(இடமிருந்து) எஸ்பிசிஏ நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர், நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங், ‘ப்ரோ போனோ எஸ்ஜி’யின் பிரதிநிதித்துவப் பிரிவுத் தலைவர் வக்கீல் சாதனா ராய்.
(இடமிருந்து) எஸ்பிசிஏ நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர், நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங், ‘ப்ரோ போனோ எஸ்ஜி’யின் பிரதிநிதித்துவப் பிரிவுத் தலைவர் வக்கீல் சாதனா ராய். - படம்: ரவி சிங்காரம்

“விலங்குகளைத் துன்புறுத்துவோரைத் தண்டிக்க ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது?” என்ற கேள்விக்கு, “நாம் சந்திக்கும் ஆகப் பெரிய சவால்களில் ஒன்று, ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதே. காரணம், விலங்குகளால் பேச முடியாது. நீதிமன்றத்தில் மக்கள் முன்வந்து சாட்சி சொல்லத் தயங்குகிறார்கள்,” என்றார் திரு இங்.

இதற்குத் தீர்வாக, விலங்குகளுக்கு ஏற்படும் வலியை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்த எஸ்பிசிஏ ஆய்வு செய்து வருவதாகக் கூறினார் ஆர்த்தி.

“விலங்கைத் துன்புறுத்தியவர் அல்லது நிராகரித்தவர், 12 மாதங்களுக்குப் பின் மீண்டும் விலங்குகளை வைத்துக்கொள்ளலாம் என்கிறது சட்டம். அந்த அவகாசம் வாழ்நாளுக்கும் நீடிக்கப்பட வேண்டும்,” என்றார் ஆர்த்தி.

மாநாட்டில், விலங்குகளுக்காக குரல்கொடுக்கும் அதிகபட்சம் பத்து குழுக்களுக்கு எஸ்பிசிஏ $1,000 வரையிலான மானியம் வழங்கவுள்ளது. மாநாட்டின் இறுதி நாளில் அக்குழுக்கள் அறிவிக்கப்படும்.

விலங்கு நலன் குறித்து மக்களுக்கு உணர்த்திய மாநாட்டில் இடம்பெற்ற கூடங்கள்.
விலங்கு நலன் குறித்து மக்களுக்கு உணர்த்திய மாநாட்டில் இடம்பெற்ற கூடங்கள். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்