மாது ஒருவர் பொய் மேல் பொய் கூறி ஆடவர் ஒருவரிடம் 24 சந்தர்ப்பங்களில் $57,250க்கு மேல் பெற்றார்.
இதில் ஒரு பகுதியாக தான் வீடமைப்பு வளர்ச்சிக் கழக பரிவர்த்தனைக்காக பணம் கட்ட வேண்டியிருப்பதாகவும், தமது மகள் பின்னர் மகன் ஆகியோர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் அந்த மாது தானும் மரணமடைந்ததாக நடித்து அதற்காக வழக்கறிஞரின் சட்ட செலவுகள் பாக்கி இருப்பதாகக் கூறி அதைத் தரும்படி அந்த ஆடவரிடம் கோரினார்.
பிரிசிலா ஷாமானி மனோகரன் என்ற அந்த மாது வாடகைக்கு தங்க வீடு தருவதாகப் பொய்யுரைத்து 11 பேரிடமிருந்து $49,000 பெற்றார்.
அந்த 33 வயது மாது வியாழக்கிழமை (ஜூன் 20ஆம் தேதி) அன்று தன்மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு எதிரான மேலும் 14 குற்றச்சாட்டுகள் ஜூலை மாதம் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்படும்.
இவர் 2022ஆம் ஆண்டு குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.
அந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இரு பிள்ளைகளுக்கு தாயான திருவாட்டி பிரிசிலா ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் வழியாக தமது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டை மாதம் $1,500லிருந்து $1,800வரையிலான வாடகைக்கு விடப்போவதாகக் கூறி விளம்பரம் பதிவேற்றியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அந்த வீட்டில் தமது பெற்றோர், பிள்ளைகள், பணிப்பெண் ஆகியோருடன் அங்கு வசித்து வந்த அவருக்கு வீட்டை வாடகைக்கு விடும் எண்ணம் இல்லை.
இதில் பொய்யான வாடகை ஒப்பந்தம் தயாரித்து வீட்டை வாடகைக்கு கேட்டு வருவோரை வீட்டை பார்வையிடும்படி அழைத்து அவர்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார்.
இவர் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 17லிருந்து மே 27ஆம் தேதிவரை 22 சந்தர்ப்பங்களுக்கும் மேலாக ஒன்பது பேரிடமிருந்து ஏமாற்றி மொத்தம் $37,283 பெற்றுள்ளார்.

