உயரத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான விதிகளை மீறியதன் தொடர்பில் இங்குள்ள நிறுவனங்களுக்கு 9 பணி நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்களுக்கு மொத்தம் $452,600 அபராதம் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
ஊழியர்கள் உயரத்தில் வேலைபார்க்கும் சூழல் உள்ள பணியிடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் நிறுவனங்களின் விதிமீறல் வெளிச்சத்துக்கு வந்ததாக ஜூன் 21ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அமைச்சு குறிப்பிட்டது.
கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 1,000க்கும் மேற்பட்ட இத்தகைய பணியிடங்களில் சோதனை நடத்தியதாக அது கூறியது.
சென்ற ஆண்டின் (2023) இதே காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது 10 பணி நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மொத்தம் ஏறக்குறைய அரை மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) வேலையிட விபத்தால் மாண்டோர் எண்ணிக்கை குறைந்தபோதும், மரணம் விளைவித்த வேலையிட விபத்துகளில் அதிகமானவை ஊழியர்கள் உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்டவை.
சென்ற ஆண்டு வேலையிட விபத்தில் மாண்ட 36 பேரில் எட்டுப் பேர் உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.
மார்ச் மாதம் வெளியிட்ட வேலையிட விபத்து, சுகாதாரத்துக்கான ஆண்டறிக்கையில், சூரியசக்தித் தகடுகளைப் பொருத்தும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் ஊழியர்கள் உயரமான இடங்களில் வேலைசெய்ய வேண்டிய சூழல்களின் எண்ணிக்கையும் கூடியதாக மனிதவள அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
உரிய பாதுகாப்புத் தடுப்புகள் இல்லாதது உட்பட உயரத்தில் வேலை செய்வதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் 227 அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
ஊழியர்கள் ஏணிகளைப் பயன்படுத்தும் வேலையிடங்களில் முக்கியப் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவது அவசியம் என்று அது வலியுறுத்தியது.
பாதுகாப்பு விதிமுறைகளைச் சிறப்பாகப் பின்பற்றிய சில வேலையிடங்களுக்கு அமைச்சு பாராட்டு தெரிவித்தது.
ஜூன் 1ஆம் தேதியிலிருந்து, பாதுகாப்பு விதிமீறல் உறுதிசெய்யப்பட்டால் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக $50,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், $5 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட குத்தகைத் தொகை பெறும் கட்டுமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது அவசியம்.


