தமிழ் முரசின் அருளாந்து மறைவு

தமிழ் முரசின் அருளாந்து மறைவு

3 mins read
982039b1-698d-4374-b59a-7a86162bb3a2
தமிழ் முரசின் மூத்த ஊழியர் திரு அருளாந்து செபஸ்­டி­யன். - படம்: குடும்பத்தினர்

சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் பணிபுரிந்த மூத்த ஊழியர் திரு அருளாந்து செபஸ்டியன் ஜூன் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 75.

1959ல் குளுவாங்கில் கணக்‌குப் பிள்ளையாகப் பணிபுரிந்து வந்த அவருடைய தந்தை காலமானதும் திரு அருளாந்தை உறவினர்களோடு சிங்கப்பூருக்‌கு அனுப்பிவிட்டு தமிழகத்துக்‌குத் திரும்பிவிட்டார் அவரது தாயார். சிங்கப்பூர் வந்தடைந்த திரு அருளாந்து ஆரம்ப காலத்தில் ஒரு புத்தகக்‌கடையில் வேலை செய்யத் தொடங்கினார்.

16 வயதில் முழுநேர வேலை தேடிக்‌கொண்டிருந்த அவர், அப்போது இயங்கிக்கொண்டிருந்த தமிழ் மலர் செய்தித்தாளில் அச்சுக்‌ கோப்பவராகப் பணியில் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் உலோகத்திலான எழுத்து வடிவங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒன்றுசேர்த்தபின் சேர்க்கப்பட்ட எழுத்துகளைப் பக்கங்களாக வடிவமைப்பதே அச்சுக்‌ கோப்பவரின் பணியாகும்.

1968ல் தமிழ் முரசில் அச்சுக்கோக்கும் ஊழியராக வேலை செய்யத் தொடங்கினார்.

திரு அருளாந்து, சக ஊழியர்களால் தங்கசாமி அண்ணன் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

பல ஆண்டுகளாகத் தம்முடன் நெருங்கிப் பழகிய திரு அருளாந்தைத் தம் கூட்டாளியாக கருதுகிறார் திரு எம். நடராசன், 85. முதலில் தமிழ் முரசில் சக ஊழியர்களாக அறிமுகமாகி, பின் குடும்ப நண்பர்களாகிய அவர்கள் இருவரும், அண்மைய காலம்வரை ஒவ்வொரு வாரமும் சந்தித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் சொன்னார்.

“அவர் மிகவும் அன்பானவர், நேர்மையானவர். ஒரு நல்ல நண்பரை இழந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என்று சொன்னார் திரு நடராசன்.

“தமிழ் முரசுக்‌கு அதிகளவில் வருமானம் தரக்‌கூடிய வேலையான வங்கி அறிக்‌கை விளம்பரங்களை செவ்வனே பிழையின்றி தயார் செய்து தருவார்,” என்று சொன்னார் 1990ல் தமிழ் முரசில் வேலைக்குச் சேர்ந்த தமிழ் முரசின் தலைமை உதவி ஆசிரியர் திரு அண்.சிவ. குணாளன்.

அப்போது திரு அருளாந்து தினமும் மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு வேலைக்‌கு வந்து சென்றதை அவர் நினைவுகூர்ந்தார். மேலும், “அவர் மிகவும் எளிமையானவர், சிக்‌கனமானவர்,” என்றும் சொன்னார் திரு குணாளன்.

2006ல் தமிழ் முரசைச் சேர்ந்த தற்போதைய தமிழ் முரசின் ஆலோசனை ஆசிரியரான திரு ஜவஹரிலால் ராஜேந்திரன், 66, அவர் நல்லொழுக்கம் நிரம்பிய நல்ல மனிதர் என்று கூறினார்.

“தினமும் தம் கைத்தடியைப் பிடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு வந்து, முதல் வேலையாக எல்லோருக்‌கும் சிரித்த முகத்துடன் வணக்கம் கூறுவார்,” என்றார் திரு ராஜேந்திரன். “இத்தனை ஆண்டுகளாக வேலை இடத்தில் நான் சந்தித்த நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்,” என்றார் அவர்.

அச்சுக் கோக்கும் காலத்திற்குப் பிறகு பலவகையில் முன்னேற்றம் கண்ட தமிழ் முரசின் அடுத்த நிலையான கணினிமயம் தொடங்கியபோது அதை ஆர்வத்துடன் வரவேற்றார் திரு அருளாந்து.

நீண்ட காலம் தமிழ் முரசுடன் பயணம் செய்த திரு அருளாந்து, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவகையில் தம்மை மேம்படுத்திக்கொண்டு, கணினி மூலம் தட்டச்சு செய்யவும் பக்கங்களை வடிவமைக்கவும் கற்றுக்கொண்டு, 2014 வரை அங்கு பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

அவரது நல்லுடல், ஜூன் 22ஆம் தேதி (சனிக்கிழமை), பிற்பகல் 2 மணிக்கு, கேலாங் பாரு, புளோக்‌ 22ன் கீழ்த்தளத்தில் இருந்து, செயின்ட் மைக்கேல் சாலையிலுள்ள செயின்ட் மைக்கேல் தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்படும். அங்கு பிற்பகல் 2.15 மணிக்குத் திருப்பலி வழிபாடு நடைபெறும். பின்னர், அன்னாரின் நல்லுடல் மாலை 4.15 மணிக்கு மண்டாய் தகனச்சாலை 1ல் எரியூட்டப்படும்.

குறிப்புச் சொற்கள்