தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரோமில் போப் பிரான்சிசைச்சந்தித்த அதிபர் தர்மன்

2 mins read
b7f73d1a-cc56-4e4d-9da4-eb3ce476abea
போப் பிரான்சிசைச் சந்தித்த சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஏஏஃப்பி

அதிபர் தர்மன் சண்முகரத்னம், சனிக்கிழமை (ஜூன் 22) ரோமில் போப் பிரான்சிசைச் சந்தித்துள்ளார்.

2016க்குப் பிறகு சிங்கப்பூர் அதிபர் ஒருவர் இத்தாலிக்குச் செல்வது இது முதல் முறை.

ஜூன் 20ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை தண்ணீர்ப் பொருளியல் பற்றிய உலகளாவிய ஆணையத்தின் கூட்டத்திற்கு அவர் இணைத் தலைமை ஏற்கிறார்.

ஜூன் 24 முதல் 26 வரை அவர் இத்தாலிக்கும் எஸ்டோனியாவுக்கும் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

ஜூன் 22ஆம் தேதி வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவில், “எனது ரோம் பயணத்தின்போது ​புனித போப் பிரான்சிஸ் அவர்களை எனது மனைவியுடன் இன்று காலை தனிப்பட்ட பார்வையாளர்களாக சந்தித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு,” என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டிருந்தார்.

உலகில் போருக்கும் மனிதகுலத்திற்கு ஏற்படும் இன்னல்களுக்கும் முடிவு ஏற்பட வேண்டிய அவசியம் குறித்து போப் பிரான்சிஸ் பேசியதாகவும் அவர் சொன்னார்

சமய நல்லிணக்கம் பற்றி கலந்துரையாடியதாகவும் இது முன்பைவிட இப்போது மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.

“பல சமய நம்பிக்கைகளுக்கு இடையே நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் சிங்கப்பூரின் தொடர் முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டேன்,” என்றார் அவர்.

“இவ்வாண்டு செப்டம்பரில் சிங்கப்பூருக்கு வரும் போப் பிரான்சிசை வரவேற்க நாங்கள் எல்லாரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று அதிபர் தர்மன் மேலும் தெரிவித்தார்.

செப்டம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூர் குடியரசுக்கு போப் பிரான்சிஸ் முதல் முறையாக வருகையளிக்கவிருக்கிறார்.

செப்டம்பர் 12ஆம் தேதி அவரது தலைமையில் மாபெரும் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 40,000க்கும் மேற்பட்ட நுழைவுச் சீட்டுகள் இணையம் வழியாக குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ளவர்கள் இதற்கு ‘myCatholicSG’ இணையப் பக்கம் வழியாக ஜூன் 24 முதல் ஜூலை 31 வரை முன்பதிவு செய்யலாம்.

அதிபர் தர்மனும் போப் பிரான்சிசும் தங்களுடைய சந்திப்பின்போது பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்