கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது முகக்கவசம் அணிய மறுத்து பாதுகாப்பு இடைவெளித் தூதர் ஒருவர் மீது சட்டவிரோதமாக வலுக்கட்டாயமான முறையில் நடந்துகொண்ட மாதுக்கு 9,200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையன்று (ஜூன் 24) சிங்கப்பூரைச் சேர்ந்த 49 வயது கிலேரியல் கிரிஃபின் எனும் மாதுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டனைச் சேர்ந்த தனது கணவருடன் மரினா பே சேண்ட்சில் அவர் கொவிட்-19 விதிமுறைகளை மீறினார்.
முகக்கவசம் அணியாததற்கான ஒரு குற்றச்சாட்டையும் அரசாங்க ஊழியரிடம் சட்டவிரோதமான முறையில் வலுக்கட்டாயமாக நடந்துகொண்டதாக ஒரு குற்றச்சாட்டையும் கிரிஃபின் ஒப்புக்கொண்டார். பொதுமக்களுக்குத் தொந்தரவு அளித்ததாக அவர் மீது சுமத்தப்பட்ட மேலும் ஓர் குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று கிரிஃபினும் அவரது கணவரும் நண்பர்கள் சிலருடன் மரினா பே சேண்ட்சில் உள்ள ‘டேலஸ் பார்’ எனும் மதுபான உணவுக் கடையில் இரவு உணவு சாப்பிட்டு மதுபானம் அருந்தினர். இரவு 10.30 மணிக்கு மேல் மதுபானம் அருந்தக்கூடாது என்ற விதிமுறை அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட பிறகும் அவர்கள் தாங்கள் வாங்கிய மதுபானத்தைக் குடித்து முடிக்கவில்லை.
அப்போது அவ்வழியே சென்ற பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு யாரும் மதுபானம் அருந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் கடைக்காரர்கள் நிலைமையை எடுத்துக் கூறினர்.
அதற்குப் பிறகு உணவுக் கடையிலிருந்து வெளியேறிய கிரிஃபின் தம்பதி முகக்கவசம் அணியாமல் சென்றுகொண்டிருந்ததை பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் கண்டனர். முக்கவசம் அணியுமாறு அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் மறுத்தனர்.
அந்தக் காலகட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்தது.
தம்பதி முகக்கவசம் அணியாததைப் பாதுகாப்பு இடைவெளித் தூதர்களில் ஒருவர் கைப்பேசியில் படமெடுத்தார். அதற்குப் பிறகு கிரிஃபினின் நடவடிக்கைகள் பல காணொளிகளில் பதிவானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
படமெடுத்த பாதுகாப்பு இடைவெளித் தூதரிடம் அவர் தகாத வார்த்தைகள் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. தூதரின் முகக்கவசத்தையும் கிரிஃபின் அனுமதியின்றி அகற்றினார்.
இந்த விவகாரத்தில் கிரிஃபினின் கணவருக்கும் 1,200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

