தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சேதமடைந்த கப்பலைச் சுற்றி மிதவைகள் போட்டது தவிர்ப்பு நடவடிக்கை மட்டுமே: சீ ஹொங் டாட்

2 mins read
d2a94866-2532-48e7-b326-44e4ec111e64
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் (இடது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாசிர் பஞ்சாங் கப்பல் முனையத்துக்கு அருகே சேதமடைந்த கப்பலைச் சுற்றி போடப்பட்ட தடுப்பு மிதவைகள் மேலும் எண்ணெய்க் கசிவு ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவே ஒழிய, ஏற்கெனவே கசிந்த எண்ணெய் பரவாமல் இருப்பதற்காக அல்ல என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

நெதர்லாந்து கொடியை ஏந்திய வாக்ஸ் மேக்சிமா எனும் படகு சிங்கப்பூர் கொடியை ஏந்திய மரின் ஹானர் கப்பலை மோதியதில் மரின் ஹானரின் சரக்குப் பகுதி சேதமடைந்தது. அதனால் இம்மாதம் 14ஆம் தேதியன்று பிற்பகல் 2.20 மணியளவில் 400 மெட்ரிக் டன் அளவிலான எண்ணெய் கடலில் கசிந்தது.

திங்கட்கிழமையன்று (ஜூன் 24) எண்ணெய்யைச் சுத்தம் செய்வது தொடர்பில் நடைபெற்ற செய்தியளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீ, சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையமும் அதனுடன் பணியாற்றும் டி&டி சால்வேஜ் ஏ‌ஷியா நிறுவனமும் இத்துறையின் அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் உகந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட 15 மணி நேரம் கழித்து டி&டி, மரின் ஹானர் கப்பலைச் சுற்றி 200 மீட்டர் நீளம்கொண்ட தடுப்பு மிதவைகளைப் போட்டது. சேதமடைந்த கப்பலைச் சுற்றி தடுப்பு மிதவைகளைப் போட பல மணிநேரம் ஆகும் என்று திரு சீ குறிப்பிட்டார்.

“அந்த நேரத்தில் கடலில் கசிந்த எண்ணெய்யில் கணிசமான அளவு நீரோட்டத்தினாலும் அலைகளாலும் சம்பவ இடத்திற்கு அப்பால் உள்ள இடங்களுக்கும் பரவக்கூடும். ஜூன் 14ஆம் தேதி ஏற்பட்டதைப்போல் பெரிய அளவிலான எண்ணெய்க் கசிவுச் சம்பவங்களில் இவ்வாறு நிகழ்வதைத் தவிர்க்க முடியாது,” என்றார் திரு சீ.

சம்பவ இடத்திலிலேயே தொடர்ந்து காணப்படும் எண்ணெய்யைத் தடுப்பு மிதவைகள் பரவாமல் ஓரளவு பார்த்துக்கொள்ளும்.

“ஆனால் அதை முற்றிலும் தடுக்க முடியாது. நீரோட்டமும் அலைகளும் எண்ணெய்யை மிதவைகளுக்கு மேலே அல்லது கீழே இழுத்துச் செல்லக்கூடும்,” என்று திரு சீ சுட்டினார்.

சிங்கப்பூரின் எல்லா கடற்கரை, நீர்முகப்புப் பகுதிகளிலும் தடுப்பு மிதவைகளைப் போடாதது ஏன் என்று திரு சீயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கடற்கரைப் பகுதிகளிலும் அவ்வாறு செய்ய முடியாது எனப் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்