வலுவாகும் சிங்கப்பூர்-இத்தாலி உறவு

வலுவாகும் சிங்கப்பூர்-இத்தாலி உறவு

2 mins read
c68473c7-71bd-4de2-a762-ace22fab30f9
இத்தாலியத் தலைநகர் ரோமில் சிங்கப்பூரர்களுக்கான விருந்து நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் (நடுவில்) கலந்துகொண்டார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

ரோம்: இத்தாலியுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள உறவு பல ஆண்டுகள் நீடிக்கிறது.

1965ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுதந்திரமடைந்த பிறகு இருநாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு தொடங்கியது. இருதரப்பு உறவு இன்றும் பொருளியல் ஒத்துழைப்பு வாயிலாகத் தொடர்கிறது.

இன்று சிங்கப்பூர் நிறுவனங்கள் இத்தாலியில் செயல்பட விரும்புவதாகவும் அங்கு இயங்கிக்கொண்டிருப்பதாகவும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார். இத்தாலியத் தலைநகர் ரோமில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 23) வெளிநாடு வாழ் சிங்கப்பூரர்களுக்கான விருந்து நிகழ்ச்சியில் திரு தர்மன் பேசினார்.

ஜெனோவா நகரில் சிங்கப்பூர் துறைமுக ஆணையம் ஆகப் பெரிய சரக்குக் கப்பல்களுக்கான இரு முனையங்களை நடத்துவதையும் ஜிஐசி நிறுவனம் இத்தாலியில் குறிப்பிடத்தக்க வகையில் முதலீடு செய்துள்ளதையும் அவர் உதாரணங்களாகச் சுட்டிக்காட்டினார்.

மிலான் நகரில் மறுபயனீட்டு எரிசக்தியில் இயங்கும் தரவு நிலையத்தை நடத்துவதும் ஜிஐசியின் இத்தாலிய முதலீட்டு நடவடிக்கைகளில் அடங்கும் என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

இரு நாடுகளும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன.

எஸ்டிமைக்ரோஇலெக்ட்ரானிக்ஸ் எனும் பிரெஞ்சு-இத்தாலிய நிறுவனமும் 1970களிலிருந்து சிங்கப்பூரின் மின்னணுத் துறையில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

“இது பல காலமாக நீடிக்கும் உறவு. ஆனால் இப்போது அது புத்துயிர் பெற்று மறுவடிவம் பெறுகிறது. நாம் உறவை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறோம்,” என்று திரு தர்மன் கூறினார்.

இத்தாலிக்குத் தாம் மேற்கொண்ட அதிகாரபூர்வப் பயணத்தின் ஓர் அங்கமாக திரு தர்மன் விருந்து நிகழ்ச்சியில் பேசினார். இத்தாலியில் உள்ள சுமார் 30 சிங்கப்பூரர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இத்தாலியில் வசிப்பவர்கள், கல்வி பயில்பவர்கள், அங்குப் பயணம் மேற்கொண்டு வருபவர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

இத்தாலியத் தூதரக இணையத்தளத்தில் இடம்பெறும் தகவல்களின்படி, 5,000க்கும் அதிகமான இத்தாலியர்கள் சிஙகப்பூரில் வசிக்கின்றனர் அல்லது வேலை செய்கின்றனர். சிங்கப்பூரில் உள்ள இத்தாலிய சமூகம் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு தர்மன், சனிக்கிழமையன்று (ஜூன் 22) கத்தோலிக்க சமய குருவான போப் பிரான்சிசைச் சந்தித்தார். மேலும், ஜி30 கூட்டமைப்பின் சந்திப்பு ஒன்றிலும் அவர் கலந்துகொண்டுப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்