மூன்று வட்டாரங்களில் முடுக்கிவிடப்படும் புறாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

மூன்று வட்டாரங்களில் முடுக்கிவிடப்படும் புறாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

2 mins read
e75ee391-a9f7-445e-bf2a-5e156267f1c4
புறாக்களுக்கு உணவு ஊட்டவேண்டாம் என்பதை நினைவூட்டும் பதாகை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அருகருகே அமைந்திருக்கும் மூன்று தொகுதிகளில் அடுத்த ஆறு மாத காலத்தில் புறா எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங் மோ கியோ, பீஷான் - தோ பாயோ, தஞ்சோங் பகார் நகர மன்றங்கள் இருக்கும் வட்டாரங்களில் புறாக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகம் காணவுள்ளது. அப்பகுதிகளில் உள்ள புறாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு அரசாங்க அமைப்புகளும் சம்பந்தப்பட்ட நகர மன்றங்களும் கூடுதல் முயற்சிகளை எடுக்கின்றன.

திட்டத்தின்கீழ், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, தேசிய பூங்காக் கழகம் ஆகிய மூன்றும் சம்பந்தப்பட்ட மூன்று நகர மன்றங்களுடன் இணைந்து பணியாற்றும். ‘ராக் பிஜியன்’ ரக புறாக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அந்த அமைப்புகள் மேற்கொள்ளும்.

‘ராக் பிஜியன்’ புறா, சிங்கப்பூரில் தொந்தரவாகக் கருதப்படும் நான்கு வகை பறவை இனங்களில் ஒன்றாகும். அந்தப் புறாக்கள் சிங்கப்பூருக்குச் சொந்தமானவை அல்ல.

உணவுக் கடைகள் போன்ற இடங்களில் குப்பை, உணவுக் கழிவுகளைக் கையாளும் வழிமுறைகளை மேம்படுத்துவது, பறவைகளுக்கு உணவு ஊட்டாமல் இருக்குமாறு குடியிருப்பளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் புதிய திட்டத்தில் இடம்பெறும் புறாக் கட்டுப்பாட்டு முயற்சிகளில் அடங்கும். புறாக்கள் பிடிக்கப்பட்டு அவற்றை மனிதநேயத்துடன் கருணை அடிப்படையில் கொல்வதும் முயற்சிகளில் அடங்கும்.

அருகருகே அமைந்திருக்கும், புறாக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளாக அங் மோ கியோ, பீஷான் - தோ பாயோ, தஞ்சோங் பகார் நகர மன்றங்கள் இருக்கும் வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அம்மூன்று தொகுதிகளிலும் புறாக்களின் எண்ணிக்கையை, கையாள்வதற்குத் தோதான அளவிற்குக் குறைப்பது இலக்காகும்.

சம்பந்தப்பட்ட மூன்று தொகுதிகளிலும் தற்போது இருக்கும் புறா எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தேசிய பூங்காக் கழகம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தொகுதியிலும் 100க்கும் அதிகமான புறாக்களைக் கொண்ட பல பகுதிகள் இருப்பதாகத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்