கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் அதிகாரிகள் ஆறு பில்லியன் வெள்ளியைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 416 மில்லியன் வெள்ளி பாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் வெள்ளி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
எஞ்சிய தொகையின் பெரும்பங்கு தற்போது நடந்துவரும் விசாரணைகள் அல்லது நீதிமன்ற விசாரணைகளுடன் தொடர்புடையவை. முதன்முறையாக வெளியிடப்பட்ட சிங்கப்பூரின் தேசிய சொத்து மீட்பு உத்தி தகவல்களில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சிங்கப்பூர் எடுக்கும் முயற்சிகளில் சொத்துகளை மீட்பதற்கு ஆக அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். புதன்கிழமையன்று (ஜூன் 26) மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நிதி நடவடிக்கை செயற்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) இரண்டு நாள் சந்திப்புக்கான தொடக்க நிகழ்வில் திரு வோங் பேசினார். அதில் தேசிய சொத்து மீட்பு உத்தித் தகவல்களை அவர் வெளியிட்டார்.
தேசிய சொத்து மீட்பு உத்தித் திட்டம், தவறான முறையில் பெற்ற சொத்துகளும் பணமும் குற்றவாளிகளைச் சென்றடையாமல் இருப்பது, கள்ளப் பணத்தையும் சொத்துகளையும் நல்வழியில் பெற்றனவாக மாற்ற சிங்கப்பூரில் இருக்கக்கூடிய அனுகூலங்களை அகற்றுவது, சம்பந்தப்பட்ட சொத்துகளையும் பணத்தையும் பாதிக்கப்பட்டோரிடம் திரும்பக் கொடுப்பது ஆகிய நடவடிக்கைகளை சிங்கப்பூர் எவ்வாறு மேற்கொள்ளும் என்பதை விவரிக்கிறது.
எஃப்ஏடிஎஃப், அதன் பங்காளி அமைப்புகள் ஆகியவை சேர்ந்து எடுக்கும் முயற்சிகளின் மூலம் உலகளவில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் செயல்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கப்படுவதையும் தவிர்ப்பதில் சிங்கப்பூர் முன்னேற்றம் கண்டுள்ளது என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூர் தனது பங்கை ஆற்ற முழுமையாகக் கடமைப்பட்டுள்ளது. அனைத்துலக நிதி, வர்த்தக மையமாக இருப்பதால் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்குவது ஆகியவற்றின் தொடர்பில் நாங்கள் கூடுதல் அபாயங்களை எதிர்நோக்குவதை உணர்கிறோம்.
“ஆனால், நம்பகமான வர்த்தக நிலையம் என்ற சிங்கப்பூரின் நற்பெயரைக் கட்டிக்காக்க இத்தகைய அச்சுறுத்தல்களைக் கையாளத் தேவையானதைச் செய்ய சிங்கப்பூர் உறுதியாக இருக்கிறது,” என்றார் திரு ஓங்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலகக் காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி தவறாகப் பெறப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியனிலிருந்து மூன்று டிரில்லியன் டாலர் (2.7 டிரில்லியனிலிருந்து 4.06 டிரில்லியன் வெள்ளி) மதிப்பிலான சொத்துகளும் பணமும் அனைத்துலக நிதிக் கட்டமைப்பு வாயிலாகக் கொண்டு செல்லப்படுகிறது என்று திரு வோங் தெரிவித்தார். அவற்றில் சிறிய பங்கு மட்டுமே மீட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவறாகப் பெறப்பட்ட சொத்துகளிலும் பணத்திலும் மூன்று விழுக்காடு மட்டுமே மீட்கப்படுவதாகச் சொன்ன திரு வோங், 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான ஒரு விழுக்காட்டைவிட அந்த விகிதம் அதிகம் என்பதையும் சுட்டினார்.
“நாம் இன்னும் சிறப்பாக இயங்கவேண்டும். குறைந்தபட்சம் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம். வரும் ஆண்டுகளில் கூடுதல் சொத்துகளையும் பணத்தையும் மீட்கும் இலக்குடன் செயல்படலாம்,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.

