உணவு சேவைத் துறைக்குக் கூடுதல் சிங்கப்பூரர்களை ஈர்க்கப் புதிய தளம்

உணவு சேவைத் துறைக்குக் கூடுதல் சிங்கப்பூரர்களை ஈர்க்கப் புதிய தளம்

2 mins read
95658e9a-7815-45b2-9452-8cf980611e3f
நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி லோ யென் லிங். - படம்: சாவ்பாவ்

உணவு, பானத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கான புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

உணவு சேவைத் துறைக்குக் கூடுதல் சிங்கப்பூரர்களை ஈர்ப்பது அதன் இலக்குகளில் அடங்கும்.

இடம், வேலைப் பொறுப்பு, அனுபவம் போன்ற அம்சங்களைக் கொண்டு fabjobs.sg தளத்தில் வேலை வாய்ப்புகளைத் தேடலாம். முழுநேர, பகுதிநேர வேலைகள் என இருவகை வேலை வாய்ப்புகளுக்கும் இது பொருந்தும்.

இத்தளம் புதன்கிழமையன்று (ஜூன் 26) வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் உணவகங்கள் சங்கம், ஃபாஸ்ட்கோ நிறுவனம் இரண்டும் ஐந்தாவது முறையாக நடத்திய வர்த்தக நிகழ்ச்சியில் புதிய தளம் வெளியிடப்பட்டது. ஃபாஸ்ட்கோ, ஃபாஸ்ட்ஜாப்ஸ் தளத்தின் உரிமையாளர் நிறுவனமாகும்.

தற்போது 1,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் FABjobs தளத்தில் இடம்பெற்றுள்ளன. வேலை வாய்ப்புகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தையும் வேலை தேடுவோர் தளத்தில் நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம்.

தளம் சென்ற ஆண்டு உருவாக்கப்பட்டபோது சிங்கப்பூர் உணவகங்கள் சங்கமும் அதன் உறுப்பினர்களும் சிக்கல்களை ஃபாஸ்ட்கோ நிறுவனத்தைச் சேர்ந்த குழுவுடன் பகிர்ந்துகொண்டதாக சங்கத்தின் இணைத் தலைவர் பெஞ்சமின் போ தெரிவித்தார். வேலை வாய்ப்புகளைப் பட்டியலிடும்போது அவற்றுக்கான சம்பளத்தை நேரடியாகத் தெரிவிப்பதும் சிக்கல்களில் அடங்கும்.

சிங்கப்பூரின் உணவு, பானத் துறையில் 70 விழுக்காட்டினர் சிங்கப்பூர் உணவகங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

“உணவு, பானத் துறையில் சம்பளம் மிகவும் குறைவு என்று மக்கள் சொல்வதுண்டு. ஆனால் வழங்கப்படும் சம்பளப் பிரிவுகளை நீங்கள் பார்த்தீர்களானால், நாங்களும் மற்ற துறைகளில் வழங்கப்படுவதற்கு ஒப்பிடும் அளவில் சம்பளம் வழங்குகிறோம்,” என்று திரு போ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். நிகழ்ச்சியின்போது அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார்.

ஏற்கெனவே பல்வேறு வேலை வாய்ப்புத் தளங்கள் வேலைச் சந்தைக்கு நன்கு பங்காற்றுவதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் குறிப்பிட்டார். ஆனால் முழுநேர, பகுதிநேர, ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்ட சேவைத் துறைக்கென ஒரு தளம் தேவைப்பட்டதாகவும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்