சிங்கப்பூரில் முக்கிய வட்டாரத்தில் இடம்பெற்றுள்ள பிரபலமான ‘ஹை ஸ்திரீட் சென்டர்’ கட்டடத்தை ஒட்டுமொத்த மறுஉறுவாக்கத் திட்டத்தின்கீழ் $700 மில்லியனுக்கு வாங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது, முன்பு நிர்ணயிக்கப்பட்ட 748 மில்லியன் வெள்ளியைவிட ஆறு விழுக்காடு குறைவு.
ஒட்டுமொத்த மறுஉருவாக்கத்திற்கான விற்பனை ஏலக்குத்தகை ஜூன் 24ஆம் தேதியன்று முடிவடைந்தது. அப்போது அதிகபட்சமாக $700 மில்லியனுக்கு வாங்க விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ‘ஹை ஸ்திரீட் சென்டர்’ கட்டடத்தின் உரிமையாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
நிர்ணயிக்கப்பட்ட தொகைக்குக் கீழ் விற்பதற்கு எண்பது விழுக்காடு உரிமையாளர்களின் கையெழுத்து வேண்டும். தற்போது 65 விழுக்காட்டினர் விற்பனைக்கு ஆதரவாக உள்ளனர்.
இதனைச் சந்தைப்படுத்திய குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்ட் எனும் நிறுவனம், ஹைஸ்திரிட் சென்டர் கட்டடத்தை வாங்க விரும்பும் நிறுவனத்தின் பெயரை வெளியிடவில்லை.
கடந்த 2020 ஜூனில் முதல் முறையாக அந்தக் கட்டடம் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அது, 800 மில்லியன் வெள்ளி என மதிப்பிடப்பட்டது. 2023 அக்டோபரில் முந்தைய விலையைவிட 6.5 விழுக்காடு குறைவாக 748 மில்லியன் வெள்ளிக்கு விற்க மீண்டும் ஏலக் குத்தகை வெளியிடப்பட்டது. இந்த அளவுக்கு விலை கொடுத்து வாங்க யாரும் முன் வராத நிலையில் ஏலக்குத்தகை ஜனவரியில் முடிந்தது. அண்மைய முயற்சியில் நிர்ணயிக்கப்பட்ட 748 மில்லியன் வெள்ளியைவிட குறைவான விலைக்கு வாங்க திட்டம் நடைமுறையில் உள்ளது என்று குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்ட் கூறியது.

