தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக விவகாரம் தொடர்பில் போலிக் காணொளி: மூத்த அமைச்சர் லீ எச்சரிக்கை

1 mins read
3c104532-ba20-4e79-b336-b398a34d1bcc
போலி காணொளி படம். - படம்: LEE HSIEN LOONG/FACEBOOK

அனைத்துலக விவகாரங்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் போன்ற அம்சங்களில் தாம் கருத்துரைத்து இருப்பது போல வெளியாகி இருக்கும் போலிக் காணொளிகளை மக்கள் புறக்கணிக்குமாறு மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.

பொய்யை உண்மைபோலக் காட்டும் ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் அந்தக் காணொளிகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று வியாழக்கிழமை (ஜூன் 27) திரு லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

“இந்த போலி காணொளிகளுக்கு வர்த்தக நோக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆயினும், அவை தீய நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது.

“அந்தக் காணொளிகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் கருத்துகளை தாமோ சிங்கப்பூர் அரசாங்கமோ ஆதரிப்பது போன்ற தோற்றத்தைக் காட்டுவது போலிக் காணொளிகளைத் தயாரித்தவர்களின் விருப்பம். அது நமது தேச நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது மற்றும் ஆபத்தானது,” என்று திரு லீ குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், இதுபோன்ற காணொளிகள் இணையத்தில் வெளியாகும்போது அவை உண்மைதானா என்பதை எப்போதும் சரிபார்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

“போலிக் காணொளிகளைப் பார்ப்போர் அவை உண்மை என்று தவறாகக் கருதக்கூடும் என்பதால் அவற்றைப் பகிர வேண்டாம்,” என்றும் மூத்த அமைச்சர் தமது பதிவில் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்