ஆண்டுதோறும் நடக்கும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் ஆகச் சிறந்த பிரிவுப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில், 18 முழுநேரப் படைப் பிரிவுகளும் 12 தேசிய சேவைப் பிரிவுகளும் வெற்றிபெற்றன.
விருதுகளை அதிபர் தர்மன் சண்முகரத்னமும், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும், ஜூலை 1ஆம் தேதியன்று சிங்கப்பூர் ஆயுதப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தில், சிங்கப்பூர் ஆயுதப்படைத் தின அணிவகுப்பில் வழங்குவர்.
தலைசிறந்த போர்ப் பிரிவு வெற்றியின் பின்னணியில் ஜான் பிரேம்
தொடர்ச்சியாக 21வது ஆண்டாகத் தலைசிறந்த போர்ப் பிரிவு விருதை முதலாம் மின்னற்படைப் பட்டாளம் வென்றுள்ளது.
இப்போட்டி 1969ல் அறிமுகமானதிலிருந்து ஒட்டுமொத்தத்தில் இதுவரைக் காணாத 38 வெற்றிகளை அப்பட்டாளம் குவித்துள்ளது.
மின்னற்படை வீரராகக் (Commando) கடந்த 15 ஆண்டுகள் சேவையாற்றியுள்ள மூன்றாம் வாரண்ட் அதிகாரி ஜான் பிரேம் குமார், 35, தான் சேர்ந்ததிலிருந்து இன்றுவரை தன் பிரிவின் ஒவ்வொரு வெற்றியிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
இவ்வாண்டு தம் முழுநேர தேசிய சேவையை முடிக்கவிருக்கும் மின்னற்படை வீரர்களுக்குக் கம்பெனி சார்ஜண்ட் மேஜராகச் செயல்படுகிறார் பிரேம். அதனால் வீரர்களின் ஒவ்வொரு பயிற்சியின் பின்னணியிலும் இவரது பல மணி நேர உழைப்பு உள்ளது.
வீரர்களின் பயிற்சித் தரம் உயர்வாக இருப்பதை உறுதிப்படுத்துவதோடு, அவர்களிடத்தில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வலியுறுத்துகிறார் பிரேம்.
“உபகரணங்களை எடுத்துவைப்பதிலிருந்து சவால்களைச் செய்துமுடிப்பதுவரை ஒவ்வொரு வீரரிடமிருந்தும் தலைசிறந்த முயற்சியை எதிர்பார்க்கிறோம். அத்தகைய மனப்போக்கை எங்கள் பயிற்சி வழங்குகிறது,” என்றார் பிரேம்.
தொடர்புடைய செய்திகள்
அதே சமயம், வீரர்களின் நலனிலும் பிரேம் அன்றாடம் கவனம் செலுத்துகிறார். “மின்னற்படையினர் மிகச் சிறிய குழுக்களில் பணியாற்றுவதால் எனக்கு என் வீரர்களுடன் நெருக்கமான உறவு உள்ளது. ஒவ்வொருவரின் பலத்தையும் பலவீனங்களையும் அறிந்து, அவர்களுக்குக் கூடுதல் உந்துதலையும் வழங்குகிறேன்.
“என் வீரர்கள் ராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து பயிற்சியிலிருந்து தேர்ச்சியடையும்வரை நான் அவர்களின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் பார்த்துள்ளேன். அவர்களுக்கிடையே உள்ள பந்தத்தைக் காணும்போது நான் மனநிறைவடைகிறேன்,” என்றார் பிரேம்.
ராணுவத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் மிடுக்கான வீரராக இருந்தாலும் வீட்டில் இவர் தன் இரு மகள்களையும் மனைவியையும் அரவணைக்கும் அன்புத் தந்தையாகத் திகழ்கிறார்.
தன் தாயார் உடல்நலம் குன்றியிருப்பதால் தன் மனைவி, மாமியார் தம் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதாகவும் அவர்கள் அனைவரும் தனக்குப் பக்கபலமாக இருப்பதாகவும் கூறினார் பிரேம்.
முதன்முறையாக வென்ற ‘ஆர்எஸ்எஸ் இண்டோமிட்டபல்’ கப்பலுக்கு மின்சக்தி வழங்கும் குரும்பியன்
தலைசிறந்த கடற்படை பாதுகாப்புப் பிரிவு விருதை வென்றனர் ‘ஆர்எஸ்எஸ் இண்டோமிட்டபல்’ கப்பல் குழுவினர்.
2019 ஜனவரி முதல் ‘ஆர்எஸ்எஸ் இண்டோமிட்டபல்’ கப்பலின் மின் கட்டமைப்புகளில் பணியாற்றியுள்ள இரண்டாம் ராணுவ வல்லுநர் குரும்பியன் விஜேந்திரன், 29, முதன்முறையாகத் தன் பிரிவு இவ்விருதை வெல்வதைக் கண்டுள்ளார்.
“கடலில் நடக்கும் துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சிகளில் சிறப்பாகச் செய்தோம். இவ்வாண்டு எங்கள் முதல் வெளிநாட்டுப் பயிற்சிக்கும் செல்லவிருப்பதால் (தாய்லாந்து கடற்படையுடன் சிங்சியாம் பயிற்சி) இவ்விருதைப் பெற முடிந்தது எனக் கருதுகிறேன்,” என்றார் குரும்பியன்.
துப்பாக்கிகள், விசைப்பொறி போன்ற முழுக் கப்பலின் இயந்திரங்களும் ஒழுங்காக இயங்குவதில் குரும்பியனின் பங்கு மிக முக்கியம். துப்பாக்கிகளுக்கு மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டால்தான் கடலில் சுடமுடியும்.
கப்பலில் இரண்டாம் இளநிலை செயலாக்க வீரராகத் தொடங்கிய குரும்பியன், இன்று மேற்பார்வையாளராக முன்னேறியுள்ளார்.
தன் மையப் பொறுப்புகளோடு, தன் சக மாலுமிகளுக்குத் தீயணைப்புப் பயிற்சியும் வழங்குகிறார் குரும்பியன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கடலில் தீப்பற்றி எரிந்த கப்பலை எதிர்கொண்டபோது குரும்பியன் தீயணைப்பின் அவசியத்தை உணர்ந்தார். தீயில் மாட்டிக்கொண்ட சுமார் 14 பேருக்குப் பிராணவாயு வழங்கி மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருந்தது.
அடிக்கடிக் கப்பலில் பயணம் மேற்கொள்வதால் குரும்பியனுக்குக் குடும்பத்திலிருந்து பிரிந்திருக்கவேண்டிய சூழல். எனினும், சக மாலுமிகளும் தன் குடும்பம்தான் என்றார் குரும்பியன்.
“ஒரு முறை தீபாவளியன்று கப்பலில் இருந்ததால் அவர்கள் எனக்காகச் சுவையான பிரியாணி சமைத்துக் கொண்டாடினர்,” என்றார் குரும்பியன்.
குடும்பத்தின் முக்கிய தினங்களன்று கப்பலில் செல்லும்போது அதற்கேற்ப மற்றொரு நாள் கொண்டாடுவதாகக் கூறினார் குரும்பியன். “என் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து என் குடும்பத்தினர் பெருமைப்படுகின்றனர்,” என்றார் குரும்பியன்.

