ஐசிஸின் வன்முறை சித்தாந்தம் வட்டாரத்தில் தொடர்ந்து நிலவுகிறது: அமைச்சர் கா. சண்முகம்

3 mins read
e260a0d3-d063-49d3-9f3b-bd4863560a1f
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் ஜூன் 28ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் அண்மையில் அதன் தொடர்பாக செய்யப்பட்ட கைதுகளும் மலேசியர்களும் சிங்கப்பூரர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்‌க வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டுகிறது என சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 28ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தாக்‌குதலை நடத்திய ராடின் லுக்மானின் தந்தையும் சகோதரரும் ஐஎஸ்ஐஎஸ் (ஐசிஸ்) பயங்கரவாதக் குழுவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுவதால் தாக்‌குதல் ஐசிஸ் தூண்டப்பட்டதாக இருப்பதற்கு சாத்தியம் அதிகம் என்று சொன்னார்.

இதுவரை தாக்குதல்காரரின் குடும்பத்தினரும், 15 ஐசிஸ் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குறிவைத்தது மலேசியாவின் முன்னணித் தலைவர்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், “மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே பயங்கரவாதிகளின் இறுதி நோக்கம்,” என்று கூறினார்.

ஐசிஸின் வன்முறை சித்தாந்தம் மெய்நிகர் ஆதரவாளர்க் கட்டமைப்பால் நமது வட்டாரத்தில் தொடர்ந்து நிலவுவதாக சொன்னார் அமைச்சர்.

“இது போன்ற வன்முறை சித்தாந்தம் இருக்‌கும்வரை, அத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடக்‌கும்,” என்றார் திரு சண்முகம்.

சிங்கப்பூரின் பயங்கரவாத மிரட்டல் குறித்த அவரது மதிப்பீடு அண்மைய நிகழ்வுகளால் மாறியுள்ளதா என்று கேட்கப்பட்டபோது, “உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வழக்கமாக மதிப்பீடுகளை மேற்கொள்வதால் இது ஒரு பெரிய அதிர்ச்சியாக வரவில்லை,” என்று அவர் கூறினார்.

“நமது வட்டாரத்தை எடுத்துக்கொண்டால், பல நாடுகளில் ஐசிஸின் சித்தாந்தம் பரவலாக இருப்பதால், இதை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்‌க வேண்டும்,” என்று அமைச்சர் விவரித்தார்.

மேலும், சிங்கப்பூரும் மலேசியாவும் அருகருகே இருப்பதால், மலேசியாவில் நடக்கும் சம்பவங்கள், சிங்கப்பூரின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் - ஜோகூர் விரைவு ரயில் கட்டமைப்பை, 2026ஆம் ஆண்டின் இறுதியில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசியாவுடன் இணைப்பை விரிவுபடுத்தும் அதேவேளையில், சிங்கப்பூர் அதன் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று கேட்கப்பட்ட கேள்விக்‌கு, இது இரு வழிகளில் செய்யப்படுவதாக சட்ட அமைச்சர் சண்முகம் பதில் அளித்தார்.

முதல் வழி, எல்லைகளில் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் சோதனைகளாகும். இதனால் பயண நேரம் அதிகரித்தால், பயணிகளின் புரிதலை அவர் நாடினார்.

“இது பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது மிகவும் முக்‌கியமானது,” என்று அவர் கூறினார்.

இரண்டாவது வழி, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, மலேசியாவின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றுக்கு இடையே அணுக்கமான தொடர்பைக் கட்டிக்காப்பதாகும். வேவுத் தகவல்களைப் பகிர்வது அதில் அடங்கும் என்றார் அமைச்சர்.

பயங்கரவாத மிரட்டல்களின் தொடர்பில், முற்றிலும் சகிப்புத்தன்மை இல்லாத சிங்கப்பூரின் கொள்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

38 சிங்கப்பூரர்கள், 12 வெளிநாட்டினர் எனச் சுய தீவிரவாத மனப்போக்கு உடைய 50 தனிநபர்களுக்கு, 2015 முதல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

“நாங்கள் முன்கூட்டியே செயல்படுகிறோம். மிரட்டல் மேற்கொள்ளப்படும்வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

தீவி­ர­வா­தத்­தின் பரவலைத் தடுப்­ப­தில் சிங்கப்பூரர்களுக்‌கும் முக்‌கியப் பங்குண்டு என்றார் அமைச்சர்.

“சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்‌க அதிகாரிகள் தங்களால் இயன்றதைச் செய்யும் அதே நேரத்தில் சிங்கப்பூரர்களும் விழிப்புடன் இருந்து, சந்தேகத்திற்குரிய நடவடிக்‌கை எதனையும் கண்டால் உடனே புகார் அளிக்க வேண்டும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்