சிங்கப்பூரில் புகழ்பெற்ற நீர் நாய்க் குடும்பங்களில் ஒன்றான ‘ஸூக்’கின் ‘தலைவி’ மாண்டு கிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போத்தோங் பாசிரில் உள்ள கால்வாயில் அது மாண்டுகிடக்கக் காணப்பட்டது.
எட்டு வயது மதிக்கத்தக்க அந்த நீர் நாய் சில நாள்களுக்கு முன்னர் அதன் குடும்பத்திலிருந்து பிரிந்து காணாமற்போனதாக நீர் நாய் ஆர்வலர் குழுவான ‘ஆட்டர்சிட்டி’ ஜூன் 28ஆம் தேதி அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இணையவாசிகள் 1,000க்கும் மேற்பட்டோர் அந்த நீர் நாயின் மறைவு குறித்து வருத்தத்தைப் பகிர்ந்துள்ளனர்.
மாண்ட நீர் நாய், மிருதுவான ரோமம் உள்ள தோலைக் கொண்ட வகையைச் சேர்ந்தது. சிங்கப்பூரில் இத்தகைய 170 நீர் நாய்கள் வசிப்பதாக சென்ற ஆண்டு (2023) ஆகஸ்ட்டில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்திருந்தது.
பல ஆண்டுகளுக்குமுன் தனது குடும்பத்திலிருந்து பிரிந்த அந்த நீர் நாய் தனது இணையைக் கண்டுபிடித்து சிங்கப்பூர் ஆற்றில் ‘ஓல்ட் ஸூக்’ கிடங்குக்கு அருகே தனது குடும்பத்தை அமைத்துக்கொண்டதாக ‘ஆட்டர்சிட்டி’ ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 17 நீர் நாய்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

