போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வியட்னாமில் சிக்கிய சிங்கப்பூரர்

1 mins read
220dbf34-c59e-4da2-b20d-481f21e9c17f
படம்: - பிக்சாபே

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 43 வயது சிங்கப்பூரர் வியட்னாமில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டது குறித்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டிருக்கக்கூடும் என்பது தெரிய வந்தததாக ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 30) அறிக்கை ஒன்றின் மூலம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டது.

வெளிநாட்டில் இயங்கிய அந்த ஆடவர், கடத்துவதற்காகவும் விற்பதற்காகவும் சிங்கப்பூரில் தன்னுடன் பணியாற்றியோரிடம் போதைப்பொருளை அனுப்பி வைத்ததாக நம்பப்படுகிறது.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டதாக குடிநுழைவுத் தகவல்களில் தெரிய வந்தது. அவர் எங்கு இருக்கக்கூடும் என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள பின்னர் மத்திய போதைப்பொருள் பிரிவு அதிகாரிகள், வியட்னாமிய போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளைத் தொடர்புகொண்டனர்.

வியட்னாமின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் போதைப்பொருள் தடுப்புக் காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து அணுக்கமாக செயல்பட்டனர்.

அப்போது சந்தேக நபர் நாடு கடத்தப்பட்டு வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 28) மத்திய போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் வியட்னாமின் போதைப்பொருள் தடுப்புக் காவல்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பும் நம்பிக்கையாலும்தான் சந்தேக நபரைக் கைதுசெய்ய முடிந்தது என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் செயல்பாட்டுத் துணை இயக்குநர் லியோன் சான் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்