ரிவர் வொண்டர்ஸில் அதிசய எறும்புதின்னிக் குட்டி

ரிவர் வொண்டர்ஸில் அதிசய எறும்புதின்னிக் குட்டி

2 mins read
aceb658d-9844-4342-89c5-2e8eb22dc039
புதிய குட்டி பிறந்தது பற்றி மண்டாய் வனவிலங்குக் காப்பகம் சனிக்கிழமை (ஜூன் 29) தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. - படம்: மண்டாய் வனவிலங்குக் காப்பகம்/ஃபேஸ்புக்

மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் ரிவர் வொண்டர்ஸில் புதிய வரவாக எறும்புண்ணி அல்லது எறும்புதின்னிக் குட்டி ஒன்று சேர்ந்து உள்ளது.

அந்தக் குட்டி மிகவும் அரிதாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய ராட்சத எறும்புண்ணி வகையைச் சேர்ந்தது.

அதன் குடும்பத்தில் புதிய குட்டி இணைந்து உள்ளது குறித்து மண்டாய் வனவிலங்குக் காப்பகம் சனிக்கிழமை (ஜூன் 29) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

“இது வியக்கத்தகுந்த குட்டி. காரணம், அதன் தந்தையின் வயதைக் கணக்கிட்டு இனிமேல் அந்தக் குடும்பத்தில் குட்டி பிறக்க வாய்ப்பில்லை என்று கருதி இருந்தோம்,” என்று ரிவர் வொண்டர்ஸ் நிலப்பகுதி விலங்கு பராமரிப்புக் குழுவைச் சேர்ந்த பராமரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன், அந்த ஃபேஸ்புக் பதிவில் காணொளி ஒன்றையும் அவர் பதிவேற்றி இருந்தார்.

ராட்சத எறும்புண்ணிகள் ஆறு மாத கர்ப்பகாலத்திற்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை ஒரே ஒரு குட்டியை மட்டும் ஈன்றெடுக்கக்கூடியவை.

புதிய குட்டி அதன் 20 வயது தந்தையான ஜப்பாட்டாவுக்கும் ஐயபுரா என்னும் தாய்க்கும் ஏப்ரல் 10ஆம் தேதி, நோன்புப் பெருநாளின் முதல்நாளில் பிறந்தது.

காணொளியில் அந்தக் குட்டியின் பெயர் இல்லாததால் அதனை அறிந்துகொள்ள மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது.

தந்தையைப் போலவே குட்டியும் சுட்டியாகவும் விளையாட்டுப் பிள்ளையாகவும் உள்ளது என்று காப்பாளர் தெரிவித்தார்.

அந்தக் குட்டி பெரும்பாலும் தனது தாயின் பின்னாலேயே செல்வதாகவும் அடிக்கடி அதன் முதுகில் ஏறிக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

பாலூட்டி வகையைச் சேர்ந்த எறும்புண்ணிகளுக்கு அழுங்கு, அலங்கு என்ற பெயர்களும் உள்ளன. புற்றுகளிலுள்ள எறும்புகளையும், கறையான்களையும், ஈசல்களையும் மட்டுமே உண்பதால் எறும்புண்ணி (எறும்பை உண்ணுதல்) என்று அது அழைக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்