தேபான் மற்றும் பாண்டான் கார்டன்ஸ் வட்டாரக் குடியிருப்பாளர்கள் சுங்கை பாண்டான் வழியாக புதிய பூங்கா இணைப்பையும் ஆயர் ராஜா விரைவுச் சாலை அருகே ஆற்றின் குறுக்கில் புதிய நடையர் பாலத்தையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
பூங்கா இணைப்பு மற்றும் பாலத்தின் கட்டுமானப் பணிகளை 2025 மார்ச் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்விரு வசதிகளும் குடியிருப்பு வட்டாரங்களுக்கான வருங்காலத் திட்டங்களில் அடங்கும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ குடியிருப்பாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) பகிர்ந்துகொண்டார்.
ஆயர் ராஜா சமூக மன்றத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களை மையமாகக் கொண்ட சமூக நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் பேசினார்.
ஆயர் ராஜா விரைவுச் சாலைக்கும் பாண்டான் நீர்த்தேக்கத்துக்கும் இடையிலான சுங்கை பாண்டானை முழுமையாகச் சுற்றிச்செல்ல இந்த மேம்பாடுகள் குடியிருப்பாளர்களுக்கு உதவும் என்று திரு லீ கூறினார்.
இந்தப் பூங்கா இணைப்பு இனி வரவிருக்கும் பழைய ஜூரோங் ரயில்தட இயற்கைவளப் பாதையுடன் ஒன்றுசேரும். ஆற்றிலிருந்து சற்று வடக்கே கிளமெண்டி வனம் முதல் இண்டர்நேஷனல் பிசினஸ் பார்க் வரையில் அந்த இயற்கைவளப் பாதை அமைக்கப்பட உள்ளது.
சமூக நிகழ்வில், வருங்காலத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. புதிய பூங்கா இணைப்பு ஏறத்தாழ 570 மீட்டர் நீளத்துக்கு அமையும் என்பதை அந்தக் காட்சிப் படங்கள் காட்டின.
புதிய நடையர் பாலம் பற்றியும் திரு லீ விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஜூரோங் ஈஸ்ட்டையும் வெஸ்ட் கோஸ்ட்டையும் இணைக்கும் கம்பிவடங்களுடனான பாலமாக அது இருந்தது என்றும் தற்போது அதனை நடையர் பாலமாக தேசிய பூங்காக் கழகம் மாற்றி அமைக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டங்கள் தவிர, ஜூரோங் வட்டார ரயில் பாதை மற்றும் குறுக்குத் தீவு ரயில் பாதையில் அமைய உள்ள எம்ஆர்டி நிலையங்கள் தொடர்பான திட்டங்களும் நிகழ்வில் விளக்கப்பட்டன.
ஆயர் ராஜா விரைவுச் சாலையை மறுசீரமைக்கும் திட்டங்களைப் பற்றிய விவரங்களும் அப்போது தெரிவிக்கப்பட்டன.
கடந்த 2014ஆம் ஆண்டு தேசிய தினப் பேருரை ஆற்றிய அப்போதைய பிரதமர் லீ சியன் லூங், ஆயர் ராஜா விரைவுச்சாலையை மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைத்ததாகக் கூறிய திரு லீ, அதற்கான பல்வேறு தெரிவுகளை அரசாங்க அமைப்புகள் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தேபான் கார்டன்ஸுக்கும் ஜூரோங் லேக் வட்டாரத்துக்கும் இடையில் குடியிருப்பாளர்கள் எவ்வாறு எளிதில் நடமாடலாம் என்பதற்கான தெரிவுகளும் அதில் அடங்கும் என்று திரு லீ தெரிவித்தார்.

