தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்பூட்டிய ஒளியூட்டு

2 mins read
f8784848-0699-4e28-bd75-d68bc13d14df
போதைப்பொருள் எதிர்ப்பு நாடாவின் நிறங்களான பச்சை மற்றும் வெள்ளை நிற ஒளிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆஷ்ரமும் இல்லவாசிகளும். - படம்: த.கவி
multi-img1 of 4

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26 அனைத்துலகப் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை நினைவுகூரும் வகையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் ‘போதையில்லாஎஸ்ஜி (DrugFreeSG)‘ அமைப்பும் ஒளியூட்டு நிகழ்ச்சியைச் சிங்கப்பூர் முழு­வ­தும் நடத்தி வருகிறது.

இந்நிகழ்வு ஏழாவது முறையாக கடந்த புதன்கிழமையன்று (ஜூன் 26) இரவு 7.30 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை நடைபெற்றது.

போதைப்பொருள் பயன்பாட்டுக்‌கு எதிராக சமூகத்தின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டைப் பிரதிநிதிக்கும் வகையில் தீவைச் சுற்றியுள்ள அடையாளச் சின்னங்களும் முக்கிய கட்டடங்களும் போதைப்பொருள் எதிர்ப்பு நாடாவின் நிறங்களான பச்சை மற்றும்/அல்லது வெள்ளை நிற ஒளிகளால் அலங்கரிக்கப்பட்டன.

இந்த ஆண்டு, நிகழ்ச்சியில் 48 பங்காளிகள் கலந்துகொண்டு, இரவு நேரத்தில் அழகான வானலையை உருவாக்கினர்.

அவற்றில் ஒன்றான இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆஷ்ரம், இந்த நாளை ஒட்டி இல்லவாசிகளுக்காக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராக அழைக்‌கப்பட்டிருந்த திரு ரஞ்சித் சிங், தம் இளமைப் பருவத்தில் போதைக்கு அடிமையாகி, பின்னர் அதற்கு எதிராகப் போராடிய தம் அனுபவங்களை இல்லவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, இல்லவாசிகளும் ஆஷ்ரம் ஊழியர்களும் பச்சை ஒளிர்குச்சிகளைக் கையில் ஏந்தியபடி ஆஷ்ரம் அருகே நடைப்பயணம் சென்றனர்.

அந்நடை, இல்லவாசிகளுக்‌குத் துணிவையும் சாலையில் நடமாடும் சுதந்திரத்தையும் வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகச் சொன்னார் ஆஷ்ரம் ஊழியர்ப் பிரிவுத் தலைவர் தி. மகேஸ்வரர், 50.

“இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இல்லவாசிகள், தங்களாலும் மறுவாழ்வு பெற்று, சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைய முடியும் என்ற நம்பிக்‌கையைப் பெறுவார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் திரு மகேஸ்வரர்.

நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக, இல்லவாசிகளுக்‌கு அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

ஆஷ்ரம் இல்லவாசியான திரு மாறன் (உண்மைப் பெயரன்று), “சூழ்நிலை காரணமாகப் பலர் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதில் சமூகமும் குடும்பமும் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளால் போதைப்பொருள் புழக்கம் குறித்தும் அதிலிருந்து மீண்டுவருவது குறித்தும் மக்‌களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்,” என்று சொன்னார்.

ஆஷ்ரம் இல்லத்தில் வசிக்கும் திரு பாலன் (உண்மைப் பெயரன்று), போதைப்பொருள் விழிப்புணர்வு முக்‌கியமாக இளையர்களைச் சென்றடைய வேண்டும் என்றார். தவறான நட்பால் தனக்‌கு இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறிய அவர், அத்தகைய தவறான வழியை வேறு யாரும் நாடிவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆஷ்ரம் இல்லத்துடன், மரினா பே சேண்ட்ஸ், ஜூப்ளி பாலம், நாடாளுமன்றம், ஜுவல் சாங்கி விமான நிலையம் போன்ற இடங்களும் ‘டிரக்ஃபிரீஎஸ்ஜி’ ஒளியூட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றன.

குறிப்புச் சொற்கள்