குற்றச்செயல்களில் தொடர்புடைய சொத்துகளை விற்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
இதற்கான சட்ட திருத்தம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2ஆம் தேதி) அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்ட திருத்தம் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றால், இந்த சொத்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஆகும் செலவு மீதமாகும். அத்துடன், அவற்றின் மதிப்பை பாதுகாத்து, அவை பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் உதவும் என்று உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம், மற்ற அம்சங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இதுபற்றிய திருத்தமும் அடங்கும்.
தற்போதைய நிலையில், சட்ட அமலாக்க அமைப்புகள், விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தேவையில்லாத சொத்துகள் தொடர்பாக, அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் அனுமதி பெற்ற பின்னரே அவற்றை விற்க முடியும்.
இதில் பலதரப்பினரிடையே ஒருவர் மற்றொருவருக்கு இடையே இணக்கம் இல்லை என்றால், அமலாக்க அமைப்புகள் அந்த சொத்துகளை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இதனால், வாகனங்கள், கால்நடைகள், போன்ற பொருள்களை பாதுகாப்பாக வைத்திருக்க கணிசமான செலவு ஏற்படுவதாக அமைச்சின் அறிக்கை விளக்கியது.
இது குறித்து மே மாதம் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வ பதிலளித்த உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், சிங்கப்பூரின் ஆகப் பெரிய சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துகளை பாதுகாக்க காவல்துறை கிட்டத்தட்ட S$650,000 செலவிட்டதாகக் கூறினார்.
வாகனங்கள், சொத்துகள், சொகுசுப் பொருள்களான கைக்கடிகாரங்கள், கைப்பைகள், மதுபானங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க அரசு செலவு செய்ய வேண்டியிருந்ததாக விளக்கினார்.

