டெஸ்மண்ட் லீ: காலனித்துவ மரபுகளைத் தளமாகக் கொண்டு சிங்கப்பூர் உயர்ந்துள்ளது

2 mins read
bf24e9e4-5e1b-4fcc-9f44-c0273020c96f
ஃபோர்ட் கேனிங் பூங்காவில் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ், டாக்டர் நெதேனியல் வாலிச் ஆகியோரின் உருவச் சிலைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முன்பு பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. காலனித்துவ மரபுகளைத் தளமாகக் கொண்டு அவற்றை உருமாற்றி, சிங்கப்பூர் உயர்ந்திருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஜூலை 2ஆம் தேதியன்று தெரிவித்தார்.

நன்கொடை செய்யப்பட்ட ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ், டாக்டர் நெதேனியல் வாலிச் ஆகியோரின் உருவச் சிலைகளை ஏற்று அவற்றை ஃபோர்ட் கேனிங் பூங்காவில் காட்சிக்கு வைத்திருப்பது இதைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் லீ கூறினார்.

பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூரின் நாடாளுமன்றம், நிர்வாகப் பணிகள், சட்டத்துறை, அரசியல் முறை இயங்குவதை திரு லீ உதாரணங்களாகக் காட்டினார்.

“காலனித்துவத்தை சிங்கப்பூர் கொண்டாடவில்லை. இருப்பினும், அது சிங்கப்பூரின் 700 ஆண்டுகால வரலாற்றில் ஒரு பகுதியாக உள்ளது,” என்று நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் உஷா சந்திரதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவரது அறிக்கை அமைந்தது.

காலனித்துவத்தைப் பிரதிநிதிக்கும் இரண்டு உருவச் சிலைகளை மே மாதம் ஃபோர்ட் கேனிங் பூங்காவில் காட்சிக்கு வைத்ததற்கான காரணத்தைப் பற்றி உஷா சந்திரதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த இரு உருவச் சிலைகளையும் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் நன்கொடையாகக் கொடுத்தனர். அவற்றை தேசிய பூங்காக் கழகம் ஏற்றுப் பெற்றுக்கொண்டது.

ஃபோர்ட் கேனிங் பூங்காவை தேசிய பூங்காக் கழகம் நிர்வகிக்கிறது.

மற்ற நாடுகளில் காலனித்துவத்தைப் பிரதிநிதிக்கும் சிலைகள் உடைக்கப்படும் நிலையில், சிங்கப்பூர் அதை ஏற்றுக்கொண்டு காட்சிக்கு வைத்திருப்பது குறித்து ஒரு சாரார் கடும் அதிருப்திக் குரல் எழுப்பினர்.

“கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பயப்படத்தேவையில்லை. சிங்கப்பூர் தனிநாடானதை அடுத்து, சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து பல சாதனைகளைப் படைத்துள்ளனர். எனவே, கடந்த கால அனுபவங்களிலிருந்து தேவையான குறிப்புகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் பெற்றுக்கொள்ளும் ஆற்றல் சிங்கப்பூரர்களுக்கு இருக்க வேண்டும். கடந்த கால அனுபவங்களை வழிகாட்டியாகக் கொண்டு சிங்கப்பூருக்கென்றே தனித்துவம்வாய்ந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்