சிங்கப்பூரின் புதிய பெருந்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று கூடுதல் அணைகரைகளில் முதலாவது, ஜூலை 1ஆம் தேதி சேவையைத் தொடங்கியுள்ளது.
அணைகரையில் சேரக் காத்திருக்கும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சிங்கப்பூர்த் துறைமுகத்தில் நெரிசல் ஏற்பட்ட வேளையில் இந்தக் கூடுதல் அணைகரை செயல்படத் தொடங்கியுள்ளது.
துறைமுகத்தின் செயல்திறனை அதிகரிக்கும் தேசிய அளவிலான திட்டத்தின்கீழ் கூடுதல் அணைகரைகள் உருவாக்கப்பட்டன.
துவாஸ் துறைமுகத்தில் உள்ள மேலும் இரண்டு அணைகரைகள் முறையே இந்த ஆண்டு அக்டோபரிலும் டிசம்பரிலும் செயல்படத் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட சில கேள்விகளின் தொடர்பில் அளித்த பதிலில் ஜூலை 2ஆம் தேதி அவர் இதைத் தெரிவித்தார்.
20 பில்லியன் வெள்ளி செலவில் அமைக்கப்பட்ட துவாஸ் துறைமுகம் கட்டங்கட்டமாகத் திறக்கப்படவுள்ளது. அதன் ஓர் அங்கமாக அமைந்துள்ளன இந்தப் புதிய அணைகரைகள்.
ஜூலை 1ஆம் தேதி செயல்படத் தொடங்கிய அணைகரையையும் சேர்த்து அங்கு தற்போது ஒன்பது அணைகரைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் துறைமுகச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் ‘பிஎஸ்ஏ’ நிறுவனம், கெப்பல், தஞ்சோங் பகார் ஆகிய முனையங்களில் உள்ள சில அணைகரைகளில் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்கியது. ஆனால் பிரானி முனையம் மூடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, 2027ஆம் ஆண்டுக்குள் துறைமுக நடவடிக்கைகளைத் துவாஸ் துறைமுகத்திற்கு மாற்றுவதற்கு ஏதுவாக அவற்றை மூடத் திட்டமிடப்பட்டிருந்தது.
மாற்றத்திற்கு உதவும் வகையில், பாசிர் பாஞ்சாங் முனையம் மட்டும் 2040ஆம் ஆண்டு வரை செயல்படும் என்று கூறப்பட்டது.
2040ல் முழுமையாகத் திறக்கப்படும்போது துவாஸ் துறைமுகம், 65 மில்லியன் 20அடிக் கொள்கலன்களைக் கையாளும் திறன் பெற்றிருக்கும். உலகின் ஆகப் பெரிய தானியக்கத் துறைமுகமாக அது அமைந்திருக்கும் என்று கூறப்பட்டது.
இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே, கப்பல்களின் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் விதமாக சிங்கப்பூர்த் துறைமுக முனையங்களின் செயல்திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் ‘பிஎஸ்ஏ’ முனைந்துள்ளது.
தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு அந்நடவடிக்கையை அது தொடரும் என்று கருதப்படுகிறது.