பெற்றோருக்குப் போதிய கால அவகாசம் கொடுக்காமல் மூடிய பாலர் பள்ளிக்கு எதிராக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நடவடிக்கை எடுக்க இருக்கிறது.
தெம்பனிஸ் வட்டாரத்தில் இயங்கிய மெட்டிஸ் லிட்டில் கெம்பஸ் பாலர் பள்ளி ஜூலை 2ஆம் தேதியிலிருந்து மூடப்படுவதாக ஜூலை 1ஆம் தேதியன்று அப்பள்ளி தெரிவித்தது.
இதுதொடர்பான கடிதம் ஜூலை 1ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பாலர் பள்ளி மாணவர்களின் பெற்றோரைச் சென்றடைந்தது.
பாலர் பள்ளியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் நொடிப்பு நிலைக்கு விண்ணப்பம் செய்ய இருப்பதாகவும் மெட்டிஸ் பாலர் பள்ளியின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி ஜேக்கிலின் லாவ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
‘தி டேப்பஸ்ட்ரி’ கூட்டுரிமைக் குடியிருப்பில் அமைந்துள்ள மெட்டிஸ் லிட்டில் கெம்பஸ் பாலர் பள்ளியின் கதவு மூடப்பட்டிருந்ததையும் விளக்குகள் அடைக்கப்பட்டிருந்ததையும் ஜூலை 3ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் பார்க்க முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
போதுமான கால அவகாசம் கொடுக்காது, மெட்டிஸ் லிட்டில் கெம்பஸ் பாலர் பள்ளி திடீரென்று மூடப்பட்டிருப்பது குறித்து தனக்குத் தெரியும் எனப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜூலை 4ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
அந்தப் பள்ளியை நடத்தியவர் நொடிப்பு நிலைக்கு விண்ணப்பம் செய்வதால் பாலர் பள்ளி மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆனால் பாலர் பள்ளியை மூடுவதற்கு முன்பு, அதுகுறித்து மாணவர்களின் பெற்றோருக்குக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று அமைப்பு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு செய்வதன் மூலம் தங்கள் பிள்ளைகளை வேறொரு பாலர் பள்ளியில் சேர்க்க அவர்களால் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று அது தெரிவித்தது.
போதுமான கால அவகாசம் கொடுக்காமல், திடீரென்று பாலர் பள்ளியை மூடியதன் மூலம் மெட்டிஸ் லிட்டில் கெம்பஸ் பாலர் பள்ளி விதிமுறையை மீறியிருப்பதாக அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
எனவே, அந்தப் பாலர் பள்ளி நடத்துனருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் புதிய பாலர் பள்ளியைத் திறக்க தேவையான உரிமத்துக்கு விண்ணப்பம் செய்ய அவருக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அமைப்பு தெரிவித்தது.

