தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய்க் கசிவுக்குப் பிறகு முதன்முறையாகக் காணப்பட்ட ‘ஹாக்ஸ்பில் டர்ட்டல்’ முட்டைகள் உள்ள கூடு

1 mins read
c0ec1822-3f32-4b28-b347-347e73932b6f
சென்ற ஆண்டு ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் காணப்பட்ட ஹாக்ஸ்பில் ஆமைக் குஞ்சுகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முற்றிலும் அழிந்துபோகக்கூடிய அபாயத்தை மிக அதிகமாக எதிர்கொள்ளும் ‘ஹாக்ஸ்பில் டர்ட்டல்’ ரக ஆமைகளின் முட்டைகள் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் காணப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று சிங்கப்பூரின் கடற்பகுதிகளைப் பெரிதும் பாதித்த 400 டன் அளவிலான எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பிறகு முதன்முறையாக ஹாக்ஸ்பில் ஆமை முட்டைகள் காணப்பட்டுள்ளன.

மே முதல் அக்டோபர் மாதம் வரை ஆமைகள் முட்டையிட்டு அடைகாக்கும் காலமாகும். அப்படியிருக்கையில் எண்ணெய்க் கசிவு சம்பவத்தால் இந்த ஆண்டு பிறக்கும் ஆமைக் குஞ்சுகள், ஆமைகள் இடும் முட்டைகள் ஆகியவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை ஆராய ஆய்வாளர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.

ஜூன் 23ஆம் தேதியன்று தங்களுக்கு ஹாக்ஸ்பில் ஆமை முட்டைகள் குறித்து தகவல் கிடைத்ததாக தேசிய பூங்காக் கழகம் உறுதிப்படுத்தியது. முட்டைகளை மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்க முட்டைகள் இருக்கும் குழியைச் சுற்றி கழகம் தடுப்புகள் போட்டுள்ளது.

சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதிகளில் காணப்படும் இருவகை ஆமைகளில் ஹாக்ஸ்பில் ஒன்றாகும். மற்றோர் ஆமை வகை பச்சை ஆமையாகும் (கிரீன் டர்ட்டல்).

ஆண்டுதோறும் இனப்பெருக்கும் செய்யும் காலத்தின்போது பெண் ஆமைகள், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, தெற்குத் தீவுகளின் கரைகள் ஆகியவற்றுக்கு வந்து முட்டையிடும்.

ஹாக்ஸ்பில் ஆமை பொதுவாக ஒவ்வொரு முறையும் 100 முட்டைகளுக்கு மேல் இடும்.

குறிப்புச் சொற்கள்