தகுந்த வேலை உரிமம் இல்லாத வெளிநாட்டவரை வேலைக்கு எடுத்ததாக 64 வயது மாது ஒருவரின் மீது வியாழக்கிழமையன்று (ஜூலை 4) 33 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரரான ஆங் பெக் லியாங், வைபர் செயலி வாயிலாக 33 வெளிநாட்டவரைப் பகுதிநேர துப்புரவுப் பணியாளர்களாக வேலைக்கு எடுத்தார் என்று நம்பப்படுகிறது.
அந்த 33 பேரில் 27 பேர் வீட்டுப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் ஆவர். ஐவர் மற்ற நிறுவனங்களுக்கு வேலை செய்ய வேலை அனுமதி அட்டையைப் பெற்றவர்கள். ஒருவர் சார்ந்திருப்போர் அட்டையைப் (டிப்பெண்டன்ட்ஸ் பாஸ்) பெற்றவர்.
வியாழக்கிழமையன்று செய்தி அறிக்கையின் மூலம் மனிதவள அமைச்சு இத்தகவல்களை வெளியிட்டது. சம்பந்தப்பட்ட யாருக்கும் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்வதற்குத் தேவையான அனுமதி அட்டை இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

