தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடும் காயங்களைக் கையாள புதிய நிலையம்

3 mins read
55a6dc37-f5ef-40e3-9630-43e7f8b1b855
கடும் காயத்திற்கான தேசியப் பல்கலைக்கழக நிலையத்தின் திறப்பு விழா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கு வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 23 வயது பங்ளாதேஷ் ஊழியர் ரெஸா முகம்மது சலீம் வேலையிடத்தில் விபத்துக்குள்ளாகி இரும்புக் குழாய்க்கும் பாரந்தூக்கிக்கும் இடையே சிக்கி மோசமாகக் காயமடைந்தார்.

2016ல் நடந்த அந்த விபத்தால் அவரது குடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பிறரைப் போல இயல்பாகச் சாப்பிட இயலாத நிலையில், திரு ரெஸாவுக்கான உணவு ரத்த நாளத்தின்மூலம் செலுத்தப்பட்டது.

தற்போது முப்பது வயதை எட்டியுள்ள ரெஸா, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆக அதிக காலம் தங்கும் நோயாளியாக இருக்கக்கூடும். அவர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை கையாளும் கிட்டத்தட்ட 140 பணியிட விபத்துகளில், திரு ரெஸாவுக்கு நேர்ந்த அசம்பாவிதமும் ஒன்று.

அதோடு, கடும் காயங்களுக்கு உள்ளாகும் ஏறக்குறைய 1,300 பேரை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆண்டுதோறும் பராமரிக்கிறது.

கடுமையாகக் காயமடைந்த திரு ரெஸா முகம்மது சலீமுடன், கடும் காயத்திற்கான தேசியப் பல்கலைக்கழக நிலையத்தின் இயக்குநர் திரு ராஜ் மேனன் (இடது).
கடுமையாகக் காயமடைந்த திரு ரெஸா முகம்மது சலீமுடன், கடும் காயத்திற்கான தேசியப் பல்கலைக்கழக நிலையத்தின் இயக்குநர் திரு ராஜ் மேனன் (இடது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூலை நான்காம் தேதியன்று, அது தேசிய பல்கலைக் கழகத்தின் கடும் காயத்துக்கான சிகிச்சை நிலையத்தைத் திறந்து வைத்தது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காயங்கள் உள்ளிட்ட பல்வேறு கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பை வழங்க அந்தப் புதிய நிலையம் முனைகிறது.

சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை புதிய நிலையம் வழிநடத்தும். அத்துடன், சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் கவலைக்கிடமான மருத்துவ அசம்பாவிதங்களைக் குறைக்கவும் இந்நிலையம் முற்படும்.

காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் விரிவான முயற்சிகளோடு, இத்தகைய காயங்களைக் கையாள்வதற்குத் தேவையான முக்கிய அம்சங்களையும் புதிய நிலையம் கவனத்தில் கொள்ளும் என்று சுகாதார அமைச்சின் சுகாதாரத் தலைமை இயக்குநரான கென்னத் மாக், நிலையத்தின் தொடக்க விழாவில் தெரிவித்தார்.

“மருந்தகச் செயலாக்கம், சோதனையிடுதல், சோதனை முறையை ஒப்பிடுதல், காயத் தடுப்பு, நோயாளியின் உயிர்பிழைப்பு, ஆய்வு ஆகியவை இந்த முக்கிய அம்சங்களில் அடங்கும்,” என்றார் பேராசிரியர் மாக்.

சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் உள்ள மருத்துவமனையுடனும் வருங்காலத்தில் கட்டப்படவுள்ள தெங்கா பொது, சமூக மருத்துவமனை உள்ளிட்ட புதிய மருத்துவமனைகளுடனும் புதிய நிலையம் பராமரிப்பை ஒருங்கிணைக்கும் என்று அந்நிலையத்தின் இயக்குநர் ராஜ் மேனன் தெரிவித்தார்.

காயத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்நிலையம் தரவுகளையும் பயன்படுத்த உள்ளது.

கடும் காயங்கள் ஏற்படும் அபாயத்தை வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் எதிர்நோக்குவதால், விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய நிலையம் அடையாளம் கண்டுள்ள மூன்று முக்கியப் பிரிவினரில் அவர்களும் அடங்குவர்.

பிள்ளைகளும் வயது மூத்த பெரியோரும், புதிய நிலையம் அடையாளம் கண்டுள்ள மற்ற இரண்டு பிரிவினர்.

மனிதவள அமைச்சின் கடந்த ஆண்டுக்கான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அறிக்கையின்படி, சென்ற ஆண்டு வேலையிட மரணங்களிலும், கடும் காயங்கள் விளைவித்த சம்பவங்களிலும் 60 விழுக்காடு, வெளிநாட்டு ஊழியர்களை அதிக அளவில் பணியில் அமர்த்தும் கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறையில் நிகழ்ந்தவை.

கடும் காயத்திற்கு உள்ளானோருக்கு மேலும் விரைவில் சிகிச்சை அளிக்கும் நோக்கில், அவசர மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் போன்றோரை உடனடியாகப் பணியில் ஈடுபடுத்த, ‘கோட் ட்ரோமா’ எனப்படும் உடனடி நடவடிக்கை முறையையும் புதிய நிலையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்