சிங்கப்பூரின் சில்லறை விற்பனை கடந்த மே மாதம் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதம் காணப்பட்ட சரிவைத் தொடர்ந்து மே மாதத்தில் சில்லறை விற்பனை கூடியது. ஆனால், வாகன விற்பனையைக் கருத்தில்கொள்ளாவிட்டால் சில்லறை விற்பனையில் வளர்ச்சி இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு அடிப்படையில் மே மாதம் சில்லறை விற்பனை 2.2 விழுக்காடு கூடியது. ஏப்ரல் மாதம் சில்லறை விற்பனை 1.2 விழுக்காடு குறைந்திருந்தது. அதற்கு முந்தைய மூன்று மாதங்களில் வளர்ச்சி பதிவாகியிருந்தது.
புள்ளி விவரப் பிரிவு வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 5) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் தெரிய வந்தன.
எனினும், வாகன விற்பனையைக் கருத்தில்கொள்ளாவிட்டால் மே மாதம் பதிவான சில்லறை விற்பனையில் மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. ஆனால், ஏப்ரல் மாதம் பதிவான விகிதத்துடன் ஒப்பிடுகையில் 4.5 விழுக்காடு வளர்ச்சி இருந்தது.
சில்லறை விற்பனையில் இடம்பெறும் 14 பிரிவுகளில் பாதியில் ஆண்டு அடிப்படையில் விற்பனை அதிகரித்தன. வாகன விற்பனைதான் ஆக அதிகமாக 19.5 விழுக்காடு அதிகரித்தது. உணவு, மாதுபான விற்பனை 11.1 விழுக்காடு கூடியது.
கைக்கடிகாரங்கள், நகை ஆபரணங்கள் ஆகியவற்றின் விற்பனை 7.4 விழுக்காடு அதிகரித்தது.
ஆடை மற்றும் காலணிகள், மூக்குக் கண்ணாடிப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் சில்லறை விற்பனை குறைந்தது. ஆடை மற்றும் காலணிகள் பிரிவில் விற்பனை 6.8 விழுக்காடு குறைந்தது. மூக்குக் கண்ணாடிப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் பிரிவில் விற்பனை 6.7 விழுக்காடு குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
மே மாதம் இடம்பெற்ற சில்லறை விற்பனைப் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு சுமார் 4.1 பில்லியன் வெள்ளி எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 11.5 விழுக்காட்டுப் பரிவர்த்தனைகள் இணையம்வழி இடம்பெற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் அந்த விகிதம் 11.6 விழுக்காடாகப் பதிவானது.
கணினி, தொலைத்தொடர்புப் பொருள்களுக்கான சில்லறை விற்பனையில் 47.9 விழுக்காடு இணையம்வழி இடம்பெற்றது. அந்த விகிதம் அறைகலன், வீட்டுப் பொருள்கள் பிரிவில் 30.7 விழுக்காடாகவும் பேரங்காடிகள், பெரும் பேரங்காடிகளில் வாங்கப்படும் பொருள்களுக்கான பிரிவில் 12.8 விழுக்காடாகவும் பதிவாயின.
இந்நிலையில், மே மாதம் உணவு, பானத் துறையில் சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் 2.9 விழுக்காடு கூடியது. அப்பிரிவில் ஏப்ரல் மாதம் சில்லறை விற்பனை 0.1 விழுக்காடு அதிகரித்திருந்தது.

