செந்தோசா ஊழியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

2 mins read
64c899c5-ffeb-4f01-86cc-eecda821d86d
செந்தோசா தீவு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செந்தோசாவில் வேலை செய்யும் 15,000 ஊழியர்களுக்குப் பல்வேறு திறன்களைக் கற்றுத்தரும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று வியாழக்கிழமையன்று (ஜூலை 4) தொடங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சுற்றுப்பயணத் துறைக்கு மெருகூட்டுவது இந்நடவடிக்கையின் இலக்காகும்.

நீடித்த நிலைத்தன்மை, தரவு, செயற்கை நுண்ணறிவு, வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் புதிய திட்டம் கவனம் செலுத்தும். இத்திட்டம், செந்தோசா வளர்ச்சிக் கழகமும் வாழ்நாள் கல்வி, பயிற்சிகளை வழங்கும் என்டியுசி லர்னிங்ஹப் அமைப்பும் இணைந்து நடத்தும் முயற்சியாகும்.

இரு அமைப்புகளும் வியாழக்கிழமையன்று இதற்கு வகைசெய்யும் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டன. மூன்றாண்டுகளுக்கு ஒத்துழைக்க அந்த இணக்கக் குறிப்பு வழிவகுக்கும்.

ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறது. செந்தோசாவில் வேலை செய்யும் ஊழியர்களில் 70 விழுக்காட்டினர் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவைச் சேர்ந்தவர்கள்.

புதிய திட்டத்தின்கீழ் செந்தோசா வளர்ச்சிக் கழகம், அதன் பங்காளிகள் ஆகியவை முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்ப என்டியுடிசி லர்னிங்ஹப் பயிற்சிகளையும் பயிலரங்குகளையும் உருவாக்கி வழங்கும்.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் என்டியுசி லர்னிங்ஹப்புடன் இணக்கக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டது. சிங்கப்பூர் முழுவதும் சுற்றுப்பயணத் துறை ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது நோக்கமாகும்.

அதன்கீழ் இடம்பெறும் 1-ஸ்டெப் தளத்தின்வழி (ஒன் செந்தோசா டிரான்ஸ்ஃபர்மே‌ஷன் அண்ட் இக்குவிப்பிங் பிளாட்ஃபார்ம்) பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். அவற்றில் பல பயிற்சிகள் சிங்கப்பூரைப் பொறுத்தவரை புதிதானவை.

அப்பயிற்சிகள் சிங்கப்பூரில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும். ஹோட்டல்கள், உணவு, பானக் கடைகள் உள்ளிட்டவற்றில் வேலை செய்யும் ஊழியர்கள் அவர்களில் அடங்குவர்.

நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட நடைமுறைகளை உருவாக்குவது, தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் பார்வையாளர்களின் அனுபவங்களுக்கு மெருகூட்டுவது போன்றவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் செந்தோசா 100 திட்டங்களையும் முயற்சிகளையும் தொடங்கும். 1-ஸ்டெப் பயிற்சிகளின் மூலம் வரும் ஆலோசனைகள், கருத்துகள் ஆகியவற்றைக் கொண்டும் அத்திட்டங்களும் முயற்சிகளும் வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்