இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில் இணையத் தளங்கள் வழியாகப் பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்களிடமிருந்து 2,277 புகார்கள் வந்துள்ளதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) தெரிவித்தது.
ஜூலை 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் 2023ஆம் ஆண்டில் 3,711 புகார்கள் பெறப்பட்டதாக அந்தக் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய ஆண்டில் பெறப்பட்ட 2,530 புகார்களைவிட 47 விழுக்காடு அதிகம்.
வாங்கிய பொருள்களைப் பெறுவதில் உள்ள சிரமம், பணத்தைத் திருப்பித் தருவதில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டில் பயனீட்டாளர்களின் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து மின்வர்த்தகங்களுக்கான ‘கேஸ்டிரஸ்ட்’ என்ற அங்கீகாரம் அல்லது ‘இ-கேஸ்டிரஸ்ட்’ என்ற திட்டத்தை சங்கம் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின்கீழ் முதல் தொகுதி அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை ‘கேஸ்டிரஸ்ட்’ முத்திரையைக் கொண்டு அடையாளம் காணலாம்.
கேஸ்டிரஸ்ட் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் சங்கத்தின் விரிவான மதிப்பீட்டு நடைமுறை மூலம் கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.
“வெளிப்படையான விலையை உறுதி செய்தல், வெளிப்படையாகக் காட்டும் விலைகளைப் பின்பற்றுதல், தெளிவான வணிக விவரங்களைத் தெரிவித்தல், இணையம் வழி பொருள்களை வழங்கும் வலுவான நடைமுறைகள் உள்ளிட்டவை விதிமுறைகளில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
பவர்பேக், ஹெபாபாபா, சலோரா, ஓரியன் ஃபியுட்சர் ஹோல்டிங்ஸ், பிசி சிஃபு, ரிமோட் ஹப், விப்ஷாப் சிங்கப்பூர் போன்ற வர்த்தக நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நவநாகரிக உடைகள் முதல் வீட்டு மின்சார சாதனங்கள், வாகனச் சேவை வரையிலான சேவைகளை இவை வழங்குகின்றன.
“இணையம்வழி மோசடிகள் அதிகமாக இருப்பதால், சலோரா போன்ற முறையான மற்றும் பொறுப்பான சில்லறை விற்பனையாளர்களுக்கு ‘கேஸ்டிரஸ்ட்’ ஒரு மதிப்புமிக்க அங்கீகாரமாக வேறுபடுத்திக் காட்டுகிறது,” என்று சலோரா தெரிவித்தது.
இந்நிலையில் மேலும் பத்து வர்த்தகங்கள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக சங்கம் மேலும் கூறியது.

