பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும்போது திறன்பேசித் திரையில் தமிழ் முரசு படிப்பார் 22 வயது தசரதராமன் ஷியாம்.
அவரது திறன்பேசியில் செய்திகளுக்கான ஒரே செயலியாக தமிழ் முரசு மட்டும் உள்ளது. தாய்மொழியில் செய்திகளைப் படிப்பதையே இவர் விரும்புகிறார்.
அன்றாட செய்திகளின் சாரத்தை வழங்கும் ஒரு நிமிடச் செய்தியை விரும்பிப் பார்ப்பார் தேசிய சேவையாளர் லக்ஷ்மணன் சாய் பாலாஜி.
அன்றாடம் செயலியில் செய்திகளைப் படிக்கும் லக்ஷ்மணன், வாரத்திற்கு இருமுறை தமிழ் முரசின் அச்சுப்பிரதியையும் படிக்கிறார். வலையொலிகளும் காற்பந்துச் செய்திகளும் இவருக்குப் பிடித்தவை.
தமிழ் முரசு செயலி, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் அதிகாரபூர்வமாக செயல்படத் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 20,000க்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்தச் செயலியின் வழி, காணொளிச் செய்திகள், ‘கேன்வா’ படச் செய்திகள், வலையொளிகள் என இச்செய்தித்தாளின் வரலாற்றில் இதுவரை கண்டிராத வடிவங்களில் படைப்புகள் வாசகர்களைச் சென்றடைகின்றன.
செயலியின் பயனீட்டாளர்களில் 24-25 விழுக்காட்டினர் 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அதிகமான இளையர்களை ஈர்த்து அவர்களது வாழ்வியலில் இணைவது தமிழ் முரசின் இலக்காகும்.
வடிவமைப்பு, தொழில்நுட்ப நூதனங்கள்
புத்துணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக, இளம் பயனீட்டாளர்களுக்கு ஏற்ப வடிவமைப்பும் தொழில்நுட்பக் கூறுகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
கடந்தாண்டு தொடக்கத்தில் இளையர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின்மூலம் அவர்களது தேர்வுகள் அறியப்பட்டதாக செயலிக்கான பணித்திட்ட நிர்வாகி சந்தோஷ் வேமிசெட்டி தெரிவித்தார்.
“இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களின் வடிவமைப்புப் போல தமிழ் முரசு செயலியின் வடிவமைப்பும் உள்ளது. தமிழ் முரசு, தன் அடையாளச் சின்னத்திற்குப் பயன்படுத்தும் வெள்ளை, கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களை மட்டும் பயன்படுத்தாமல் துடிப்புமிக்க, பல வண்ணங்களையும் சேர்த்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இச்செயலியின் செயற்கை நுண்ணறிவு கூறுகள் வழி, செய்தியை ஒலி வடிவில் கேட்கலாம். தமிழ் படிக்க இயலாதோர் செய்தி கேட்டுப் புரிந்துகொள்ளும் வசதி இதில் உள்ளது. அத்துடன் செய்திக் கட்டுரையை சேமித்துவைத்து விரும்பிய நேரங்களில் படிக்கலாம். இவற்றுடன், மேலும் சில புதிய கூறுகளை வாசகர்கள் எதிர்பார்க்கலாம் என்றார் திரு சந்தோஷ்.
பணி, நிர்வாக மாற்றங்கள்
தமிழ் முரசு காலங்காலமாக அச்சுப்பிரதியை மையப்படுத்தி வந்தது. இருந்தபோதும், 1999ல் தொடங்கப்பட்ட தமிழ் முரசு இணையத்தளம், ஜனவரி 2019ல் மறுவடிவம் பெற்றது.
செயலிக்கு முன்னதாகவே இணையத்தளமும் ஃபேஸ்புக் பக்கமும் உருவாக்கப்பட்டு மின்னிலக்க செய்திக் கட்டுரைகளுக்குத் தளமாகச் செயல்பட்டு வந்தன. இளம் செய்தியாளர்கள் ஆர்வத்தின்பேரில் அதனை இயக்கி இணையவாசிகளை ஈர்க்கத் தொடங்கியிருந்தனர்.
மின்னிலக்கத் தளங்களைச் செய்தியறைகள் உத்திபூர்வமாகப் பயன்படுத்தி வர, மின்னிலக்கச் செய்தி ஆசிரியர், மின்னிலக்க செய்திகளை எழுதுவதற்கென செய்தியாளர்கள் போன்ற பணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
2024ல் மின்னிலக்கச் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய எஸ். வெங்கடேஸ்வரன், பிறகு வாசகர், வளர்ச்சி ஆசிரியர் பணியை ஏற்றார்.
“2023ல் கியூ எனப்படும் புதிய படைப்பு நிர்வாக முறையைச் செயல்படுத்திய பிறகு, தமிழ் முரசு மின்னிலக்கத் தளத்திற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியது. இதனால், அச்சில் வெளிவருவதற்கு முன்னரே செய்திகள் பெரும்பாலும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன,”என்று திரு வெங்கடேஸ்வரன் கூறினார்.
மின்னிலக்கத் தளத்தின்மீது செய்தி அறையின் கவனம் திரும்பியுள்ளதால் படங்கள், காணொளிகள் உள்ளிட்ட கூறுகளை இணைத்து செய்தியை எப்படி சுவையுடன் படைப்பது என்பது பற்றி செய்தியாளர்கள் முதல் செய்தி ஆசிரியர்கள் வரையிலும் உள்ளோர் மறுயோசனை செய்ய வேண்டி இருந்ததாக திரு வெங்கடேஸ்வரன் கூறினார்.
“சரியான தகவல்களை உடனுக்குடன் திரட்டி நாங்கள் வெளியிடவேண்டும். அத்துடன், எழுத்துத்திறன் மட்டுமின்றி காணொளித் திறன், வாய்மொழிப் படைப்பு போன்றவற்றையும் நம் செய்தியாளர்கள் வளர்க்க வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்தச் செயலியின் வழி, காணொளிச் செய்திகள், ‘கேன்வா’ படச் செய்திகள், வலையொளிகள் பல வடிவங்களிலும் தகவல்கள் வாசகர்களைச் சென்றடைகின்றன.
தமிழ் முரசின் ஃபேஸ்புக் பக்கத்தை 130 ஆயிரம் பேரும் டிக்டாக் பக்கத்தை 54,200 பேரும் இன்ஸ்டகிராம் பக்கத்தை 27,500 பேரும் பின்தொடர்கின்றனர்.
பல்சுவை மொழிநடை
செய்தி வெளிவரும் தளம் மட்டுமன்றி, அதன் மொழிநடையையும் ‘ஜென்-ஸி’ என்ற புதிய தலைமுறை இளையர்களின் ரசனைகளுக்கு சமூக ஊடகங்களின் போக்குகளுக்கும் ஏற்ற விதமாக மாற்றும் ‘கோட் சுவிட்சிங்’ (code-switching) முறையையும் கையாள்கிறது.
பாரம்பரிய, நடப்பு விவகார நிகழ்ச்சியின் வடிவத்தில் வெளியாகும் ‘கோப்பிக் கடைப் பேச்சு’, ‘உளமார பசியாற‘ போன்ற வலையொளியில் தொடங்கி தற்போது ‘இன்னொரு டே இன்னொரு சிலே’ ‘ஜென் ஸி அலப்பறைகள் ‘ போன்ற இலகுவான, வாழ்வியல் சார்ந்த வலையொளிகளும் வெளிவந்துள்ளன. வாழ்க்கை அனுபவத்தின் பல வண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக இத்தகைய தயாரிப்புகள் விரிந்துள்ளன.
இளையர்கள் மத்தியில் வரவேற்பு
செயலிக்கான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு அதைப் பதிவிறக்கம் செய்ததாகக் கூறும் மாணவர் சு. கார்த்திகேயன், 22 , செயலியிலுள்ள சுருக்கமான செய்திகளைப் படிக்க விரும்புவதாகக் கூறினார்.
செயலி வடிவில் செய்தி படிப்பது வசதியாக இருப்பதாகக் கூறும் தேசிய கல்விக் கழக மாணவி கருணாநிதி துர்கா, 20, சமூகச் செய்திகளை கூடுதலாக விரும்பிப் படிக்கிறார். “நம் சமூக அளவில் நடைபெறும் திட்டங்களையும் அவற்றை வழிநடத்துவோரையும் பற்றி தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் உள்ளது. ஒரு சொடுக்கில் சமூகச் செய்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டிப் பட்டியலிட செயலியே வகைசெய்கிறது,” என்று அவர் கூறினார்.
செய்திகள் படிக்கும் காலம் எங்கள் இளையர் தலைமுறையிடம் குறைவாக இருப்பதால் இந்த செயலின் மூலம் சமூக நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்வது இனிமையாக இருப்பதாக அன்பழகன் நிவேதிதா, 18, கூறினார்.
“இளையர்கள் சார்ந்த செய்திகள் பல இச்செயலியில் உள்ளன. இளையர் சமூகத்துடன் என்னை இணைக்கும் பாலமாக தமிழ் முரசு திகழும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
செய்திகளைத் தவிர, சிங்கப்பூரிலுள்ள பல்வேறு நிகழ்ச்சியைப் பட்டியலிடும் ‘டிஸ்கவர்’ பிரிவு ஏற்பாடு செய்கிறது. திரைப்படங்களுக்கு முன்பதிவு செய்வதற்கான இணைப்புகளை வழங்குவதுடன் ‘பாட்டி வைத்தியம்’ தொடரின்கீழ் மருத்துவக் குறிப்புகளையும் வழங்குகிறது.
செயலியின் வலையொளி புதுமையாக இருப்பதாகக் காவல்துறை அதிகாரி திலீப் குமார், 33, பாராட்டினார். “எனக்கு தமிழில் படிக்கும் வழக்கம் கிடையாது. ஆனால் நான் காணொளி வழி தமிழ் முரசுடன் இணைவதன் மூலம் மகிழ்கிறேன். இதுபோன்ற படைப்புகள் என்னைச் சமூகத்துடன் இணைக்கிறது. காணொளிகளைத் தமிழ் முரசு தொடர்ந்து தயாரிக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்தக் கருத்துக்கு இணங்கும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி யாழினி கமலக்கண்ணன், 18, ராசி பலனையும் விரும்பிப் படிப்பதாகக் கூறினார். “பயனீட்டாளர்களின் குறிப்பிட்ட விவரங்களை அறிந்து அதற்கேற்ப செய்திகளை விநியோகிக்கும் செயலி, பயனுள்ள கருவி,” என்று அவர் கூறினார்.

