வாகனத்தில் அதிவேகம்; மோட்டார்சைக்கிளோட்டி கைது

1 mins read
ec6d2887-bde4-40ce-b64d-58c1ef7b8f5b
மோட்டார்சைக்கிளோட்டி பிடிபடும் காட்சி. - படம்: டெலிகிராம் / ‌ஷின் மின்

போக்குவரத்துக் காவல்துறையினர் அன்றாடம் மேற்கொள்ளும் சோதனைக்காக நிறுத்தச் சொன்னபோது தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற 20 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வியாழக்கிழமை (ஜூலை 4) பிற்பகல் நிகழ்ந்தது. புக்கிட் தீமா விரைவுச்சாலையில், அங்கிருந்து புக்கிட் பாஞ்சாங் ரோட்டுக்குப் போகும் சாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளோட்டியைப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் நிறுத்துமாறு சைகை காட்டியதாக காவல்துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. ஆனால் அந்த மோட்டார்சைக்கிளோட்டி நிறுத்தாமல் மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றார்.

பிறகு அந்த மோட்டார்சைக்கிள் பெட்டிர், காங்சா ரோடுகள் சந்திக்கும் சாலையில் சறுக்கியதாகக் காவல்துறை குறிப்பிட்டது. அதன் பின்னர் மோட்டார்சைக்கிளோட்டி ஓட்டம் பிடித்துத் தப்பிக்க முயன்றதாகவும் சம்பவத்தை சேரில் கண்ட சிலர் அவரைத் துரத்த முயற்சி செய்ததாகவும் சீன மொழி நாளிதழான ‌ஷின் மின் கூறியது.

அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்துக் குற்றங்களுக்காகவும் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின்பேரிலும் மோட்டார்சைக்கிளோட்டி கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சுயநினைவுடன் இருந்த மோட்டார்சைக்கிளோட்டி இங் தெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.

குறிப்புச் சொற்கள்