‘gov.sg’ அடையாளத்துடன் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட குறுந்தகவல்கள்

‘gov.sg’ அடையாளத்துடன் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட குறுந்தகவல்கள்

2 mins read
a6eddec2-0763-4525-8455-66dc17ee6a61
குறுந்தகவல் வாயிலாக நடைபெறும் மோசடிகளைத் தடுக்க புதிய அம்சம் அறிமுகம் காண்கிறது.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அரசாங்க அமைப்புகள் அனுப்பும் குறுந்தகவல்களை (எஸ்எம்எஸ்) பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் புதிய அம்சம் ஒன்று ஜூலை 1ஆம் தேதி அறிமுகம் கண்டது.

அந்தப் புதிய அம்சத்தின்படி அரசாங்க அமைப்புகள் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலிலும் ‘gov.sg’ என்னும் ஒற்றை அடையாளம் இருக்கும் எனவும் எல்லா அரசாங்க அமைப்புகளுக்கும் அந்த அடையாளம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்திடமிருந்து வரும் செய்திகளைப் பொதுமக்கள் எளிதில் கண்டறிய உதவும் இந்தப் புதிய நடவடிக்கையின்மூலம் கடந்த இரண்டு வாரங்களில் “gov.sg” எனும் ஒற்றை அனுப்புநர் அடையாளத்தைப் பயன்படுத்தி ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான அரசாங்க குறுந்தகவல்கள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

‘ஓப்பன் கவர்மெண்ட் புராடக்ட்ஸ்’ (ஓஜிபி) என்னும் அரசாங்கத் தொழில்நுட்ப முகவையின் சுயேச்சைப் பிரிவு இந்தப் புதிய அம்சத்தை உருவாக்கி உள்ளது.

அரசாங்க அதிகாரிபோல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்படும் மோசடிகளில் சிக்கிவிடாமல் பொதுமக்களைப் பாதுகாப்பதே இந்தப் புதிய நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.

இந்தப் புதிய அம்சத்தில் 100க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகள் இணைந்துள்ளதாக ஓஜிபியின் பேச்சாளர் ஜூலை 5ஆம் தேதி தெரிவித்தார்.

தற்காப்பு, உள்துறை அமைச்சுகளிலிருந்து வரும் தேசிய சேவை குறித்த தகவல்களும் அவசர சேவைகள் குறித்த குறுஞ்செய்திகளும் அந்தந்தத் துறைச் சார்ந்த பிரத்யேக அனுப்புநர் அடையாளங்களிலிருந்து வரும் என அவர் மேலும் கூறினார்.

அந்த இரு துறைகளுக்கும் ஒற்றை அடையாள அம்சத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் புதிய அம்சம் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரச்சாரங்கள் நடந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்தப் புதிய அம்சம் குறித்த தகவல்களுக்கு sms.gov.sg எனும் இணைய முகவரியைப் பார்வையிட மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் 509 அரசாங்க அதிகாரியைப் போன்று ஆள்மாறாட்டம் செய்த மோசடிகள் பதிவாகியுள்ளன என்றும் கடந்த ஆண்டில் இதுபோன்று 1993 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்