97% பாலர் பள்ளிகளில் கண்காணிப்புப் படக்கருவிகள்

2 mins read
1226d4b4-6b90-4dea-85ea-b292526ca59b
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள 97 விழுக்காட்டு பாலர் பள்ளிகளும் வளர்ச்சி சார்ந்த சிறப்புத் தேவைகள் உள்ள சிறாரை ஆரம்பத்திலியே தலையிட்டு கவனிக்கும் அரசாங்க நிதியுதவியுடன் செயல்படும் எல்லா நிலையங்களும் ஜூன் மாதம் 26ஆம் தேதி நிலவரப்படி தங்கள் வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளதாகப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதிக்குள் அனைத்து பாலர் பள்ளிகளும் வளர்ச்சி சார்ந்த சிறப்புத் தேவைகள் உள்ள சிறாரை ஆரம்பத்திலேயே தலையிட்டு கவனிக்கும் அரசாங்க நிதியுதவியுடன் செயல்படும் நிலையங்களும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று அமைப்பு சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

இன்னும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தாக பாலர் பள்ளிகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிக்குள் அவ்வாறு செய்ய பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு அவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. இதுகுறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 5) அமைப்பு அவ்வாறு பதிலளித்தது.

சிறுவர்கள் பயன்படுத்தும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வகுப்பறைகள், நடவடிக்கை அறைகள், விளையாட்டுப் பகுதிகள், குழந்தைகளுக்கு அணையாடை (நாப்கின்) அணிவிப்பதற்கான அறைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

கிண்டர்லேண்ட் அமைப்பின் இரண்டு பாலர் பள்ளிக் கிளைகளில் சிறுவர்கள் தவறாக நடத்தப்பட்டது சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியன்று தெரிய வந்தது. உட்லண்ட்ஸ் மார்ட், சன்‌ஷைன் பிளேஸ் ஆகியவற்றில் இருக்கும் கிண்டர்லேண்ட் கிளைகளில் அச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

அதனைத் தொடர்ந்து பாலர் பள்ளிகளிலும் அரசாங்க நிதியுதவியுடன் இயங்கும் நிலையங்களும் ஆரம்பத்திலேயே தலையிட்டு கவனிக்கும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு அறிவித்தது.

பாலர் பருவத் துறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் வழக்கமாகப் பரிசீலனை செய்து வருவதாகவும் பாலர் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்கியது அதில் அடங்கும் என்றும் அமைப்பு சென்ற ஆண்டு குறிப்பிட்டது. கிண்டர்லேண்ட் சம்பவங்களுக்கும் அந்நடவடிக்கைக்கும் தொடர்பில்லை என்று அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்