கடந்தகால நினைவுகளைப் பெருமையுடன் சுமந்தபடி எதிர்காலத்தை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் முரசு நாளிதழ் சனிக்கிழமை (ஜூலை 6) தனது 89வது பிறந்தநாளைக் கொண்டாடியது.
அதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், தமிழ்ச் சமூகத்தின் துணையாகவும் குரலாகவும் விளங்கிவரும் தமிழ் முரசின் 89 ஆண்டுகாலப் பயணத்தில், உற்ற தூணாகத் திகழ்ந்துவரும் வாசகர்கள் நெகிழ்ச்சியுடன் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தமிழ் முரசின் நிறுவனர் தமிழவேள் கோ சாரங்கபாணியின் தோளுக்குத் தோளாக நின்ற தளபதியும், தமிழவேள் நற்பணி மன்றத் தலைவருமான பா தியாகராஜன் தொடங்கி, தமிழ் முரசுடன் குறைந்தது 30 முதல் 50 ஆண்டுகாலத் தொடர்பில் இருக்கும் பலரும் அதன் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினர்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வாசகர்களின் கருத்துகளுக்கேற்பத் மேலும் மெருகேற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் ‘சமூகத்தின் குரல்’ சாவடியைத் தமிழ் முரசு அமைத்திருந்தது. அங்கு பலரும் வருகைதந்து, தங்கள் நினைவுகளையும், விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொண்டனர்.
மாறிவரும் சூழலுக்கேற்பத் தங்கள் எதிர்பார்ப்புகள் மாறுவதாகக் கூறிய வாசகர்கள், அதற்கேற்றபடி தமிழ் முரசும் மாறி வருவதுகண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவர்க்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படச் சாவடியிலும் வாசகர்கள் படமெடுத்துக்கொண்டனர். அது உடனடியாக அச்சிட்டு தரப்பட்டது அவர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இளையர்களுக்கான ஒரு கருத்தரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், இளம் செய்தியாளர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். செய்தித்துறை குறித்து அவர்களுக்கு இருந்த கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் அவர்கள் விடையளித்தனர்.
கருத்தரங்கில் பங்கேற்ற இளையர்கள் தங்கள் காண, கேட்க, படிக்க விரும்புபவை குறித்துப் பகிர்ந்துகொண்டனர். உணவும் உணர்வும் கலந்து களைகட்டிய அதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ் முரசின் பிறந்த நாளையொட்டி அச்சிதழுக்கும் மின்னிலக்கத் தொகுப்பிற்கும் ஆண்டுச் சந்தாதாரராக இணைந்தோருக்குச் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ் முரசு செயலிப் பயனர்கள், தமிழ் முரசின் புதிய வாட்ஸ்அப், டெலிகிராம் தளங்கள் மூலம் செய்திகள் தங்களை வந்தடைவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழ் முரசு மேலும் பல்லாண்டுகாலம் செழித்திருந்து சமூகத்திற்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட வாசகர்கள், தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
இதனிடையே, தமிழ் முரசை வாழ்த்திப் பேசிய பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, தமிழ் முரசு நாளிதழ் தனது நூற்றாண்டை எட்டுவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், “தமிழ் முரசின் வெற்றி தமிழ் சமூகத்தின் வெற்றி. இன்னும் 200 ஆண்டுகள் தமிழ் முரசின் தமிழோசை ஒலிக்க வேண்டும்,” என்று சொன்னார்.

