உலகத்தை சிறந்த இடமாக மாற்றும் ஆர்வம், ஆற்றல் சிங்கப்பூர் இளையர்களுக்கு உண்டு என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கினால் தொண்டூழியத்தில் முன்னேறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 6ஆம் தேதி ஸ்கேப்பில் நடைபெற்ற சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணியின் 10வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் பிரதமர் வோங் கலந்துகொண்டு பேசினார்.
இளையர்கள் சமூகத்திற்கு பங்காற்றி நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றார்.
திரு வோங் தமது உரையில் ஷீலா மனோகரனின் தொண்டூழியப் பணிகளை சுட்டிக்காட்டினார்.
2014ல் தொழில் நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மத்திய வளாகத்தில் படித்த ஷீலா மனோகரனுக்கு, 29, இணைப்பாட நடவடிக்கைகளில் ஆர்வமில்லை. குறைவான தொண்டூழியப் பணிகளையே செய்தார்.
உயர் நைட்டெக் சான்றிதழ் முடித்த பிறகு பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்வதில் அவரது கவனம் இருந்தது.
அப்போது, 2014 ஜுனில் புதிதாகத் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணியில் சேர அவரை ஐடிஇ கல்லூரி முதல்வர் பரிந்துரை செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
இன்று திருவாட்டி மனோகரன், அதில் சேர்ந்து இளையர்களின் திறன்களை மேம்படுத்த இளையர் குழுக்களுக்கு உதவி வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் அவர் உள்ளார். மாணவர்களுக்கு வேலையிடப் பயிற்சி வாய்ப்புகளை கண்டறிய அவர் ஐடிஇக்கு உதவி வருகிறார்.
அந்த இளையர் அணி, ஜூன் 2014ஆம் ஆண்டில் பிரதமர் வோங், கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது.
பரிவுமிக்க, ஒன்றிணைந்த சமுதாயத்திற்காக இளையர்களை தொண்டூழியப் பணிகளைச் செய்ய ஊக்குவிப்பது அதன் நோக்கமாகும்.
தற்போது 90 இளம் தலைவர்களுடனும் ஏறக்குறைய 30,000 உறுப்பினர்களுடனும் இளையர் அணி வளர்ந்துள்ளது.
பாலர்களுக்கு கல்வியறிவு, முதியோர் தோழர் திட்டம் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட திட்டங்களில் இளையர் அணி ஈடுபட்டு வருகிறது.
தொடர்ந்து பேசிய பிரதமர் வோங், இளையர்கள் தொண்டூழியப் பணிகளில் பங்கேற்பதற்காக கூடுதல் பாதைகளை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
இளையர்களால் நடத்தப்படும் இளையர் குழுவும் அவற்றில் ஒன்று. இளையர்களின் அக்கறைக்குரிய விவகாரங்களை அலசி ஆராய்ந்து, தேசம் இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கான பரிந்துரைகளை அக்குழு வழங்குகிறது.
“சமூகத்தால் பலனடைந்து அவற்றை சமூகத்திற்குத் திருப்பியளிக்கவும் ஒன்றிணைந்து நமது எதிர்காலத்தை வடிவமைக்கவும் இளையர்களாகிய உங்கள் அனைவருக்கும் வழங்கக் கூடிய வாய்ப்புகள் பல உள்ளன,” என்று திரு வோங் மேலும் தெரிவித்தார்.
இளையர்களுக்கு மூன்று யோசனைகளையும் அவர் முன்வைத்தார்.
குறைவான நேரம் தேவைப்படும் சிறிய தொண்டூழிய திட்டங்களில் சேர்ந்து தொண்டூழியத்தைத் தொடங்குவது முதல் யோசனை.
அதிக துறைகளில் இளையர்கள் பங்கேற்பதற்பதற்கு வழி செய்வது 2வது யோசனை. உதாரணமாக, தன்னந்தனியாக உள்ள முதியோர்களுக்கு அவர்களது மனநிலையை மேம்படுத்த உதவும் தொண்டூழியம்.
கடைசியாக, சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணி, அதிக வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமர் வோங் கேட்டுக் கொண்டார்.

