பன்முகத்தன்மைமிக்க சிங்கப்பூர்: அதிபர் தர்மன் பெருமிதம்

பன்முகத்தன்மைமிக்க சிங்கப்பூர்: அதிபர் தர்மன் பெருமிதம்

2 mins read
8e25a696-a891-4511-8ee6-de19d5374e64
சீலாட் ரோடு சீக்கியக் கோவில் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தில் சிறாருடன் இணைந்து ‘கேக்’ வெட்டும் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அமைச்சர் இந்திராணி ராஜா (வலது). - படம்: சுந்தர நடராஜ்

சிங்கப்பூரின் பன்முகத்தன்மையில் நாம் அனைவரும் பெருமைகொள்கிறோம் என்றும் நம் ஒவ்வொருவரின் கலாசாரமும் சிங்கப்பூரர்கள் எனும் நமது தனித்துவமிக்க அடையாளத்திற்குப் பங்களிக்கிறது என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (ஜூலை 6) இடம்பெற்ற சீலாட் ரோடு சீக்கியக் கோவிலின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது திரு தர்மன் இவ்வாறு கூறினார்.

பல்லினக் கலாசாரமே சிங்கப்பூரர்கள் எனும் அடையாளத்தின் அடிப்படை எனக் குறிப்பிட்ட அதிபர், “பிற சமூகங்களில் அவை நலிவுற்று வருவதைக் காணும் நாம், நமது அடையாளத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்திட வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

ஒவ்வோர் இனத்தவரும் வெற்றிபெற வேண்டும் என்பது அனைத்து சிங்கப்பூரர்களின் நலனுக்கானது என்று அவர் சொன்னார்.

“பல்லினக்  கலாசாரத்தை அடையாளமாகக்  கருதி நாம் பெருமைகொள்கிறோம். நம் ஒவ்வொருவரின் கலாசாரமும் சிங்கப்பூரர்கள் எனும் தனித்துவம் வாய்ந்த அடையாளத்திற்குப் பங்களிக்கிறது. அதனால், நம் ஒவ்வொருவரின் கலாசாரத்தைப் பேணுவது மட்டுமல்லாமல், பிற இனத்தவரின் கலாசாரத்தைப் பேணுவதிலும் அக்கறை கொள்கிறோம்,” என்று திரு தர்மன் பேசினார்.

பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு பிரித்தம் சிங், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“சீலாட் ரோடு சீக்கியக் கோவில் சமூகத்திற்குச் சேவையாற்றி வருகிறது. பல இன மக்களும் இக்கோவிலுக்கு வருகை தருவது நமது பல்லின, சமயக் கலாசாரத்திற்குப் பொருத்தமான சான்று,” என்று அமைச்சர் இந்திராணி ராஜா தமிழ் முரசிடம் கூறினார்.

விழாவில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு அன்பரசு, “இந்த சீக்கியக் கோவிலின் கொண்டாட்டம் ஒட்டுமொத்த சிங்கப்பூரின் கொண்டாட்டம். பல இனத்தவர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் பார்க்க இயலாத சிங்கப்பூரின் தனித்தன்மை வாய்ந்த கொண்டாட்டம் இது,” என்று சொன்னார்.

“பல்லின நல்லிணக்க மாதமாகக்  கருதப்படும் இந்தக் காலகட்டத்தில், பல இன, சமயங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் முக்கியமானதாகத் திகழும் சீலாட் ரோடு சீக்கியக் கோவிலின் நூற்றாண்டு விழா நடைபெறுவது மிகவும் பொருத்தமானது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் மத்திய சீக்கியக் கோவில் வாரியத் தலைவர் குர்தீப் சிங் உஸ்மா.

குறிப்புச் சொற்கள்