சமூக ஊடகங்கள் நிறைந்த, தவறான தகவல்கள் பரவும் இக்காலத்தில் இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் இளையர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
பல்லின, பல சமய அமைப்பின் ‘ஹார்மனி நைட்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று காரணமாக ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தச் சமூக நிகழ்வு மீண்டும் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது.
இதில், 24 வெளிநாட்டு தூதர்கள், சமயக் குழுக்களின் பிரதிநிதிகள், அரசாங்க அமைப்புகளின் அதிகாரிகள், குடிமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்தைக் கொண்டாடும் இந்நிகழ்வு மரினா பே சேண்ட்ஸில் உள்ள சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
2023ஆம் ஆண்டிலிருந்து சமய நல்லிணக்க நாள் ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மேலும் ஜூலை மாதம், இன, சமய நல்லிணக்க மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
பல்லின, பல சமய நிகழ்ச்சிக்கு லாப நோக்கற்ற தொண்டூழிய அமைப்பான தை ஹுவா குவான் ஒழுக்கநெறி சமுதாயம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிகழ்ச்சியில் பல்லினத்தவர்களின் படைப்புகள் மட்டுமல்லாமல் சமய நல்லிணக்கப் பிரகடனம் சிங்கப்பூரின் நான்கு அதிகாரபூர்வ மொழிகளில் வாசிக்கப்பட்டது,
அதிபர் தர்மன் சண்முகரத்னம் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சிங்கப்பூரை ஒரு தேசமாக பிணைக்கும் மதிப்புமிக்க அம்சத்தை நினைவூட்டும் சக்தி வாய்ந்த நிகழ்ச்சியாக ‘ஹார்மனி நைட்’ அமைந்தது என்று ஏற்பாட்டுக் குழு மற்றும் தை ஹுவா குவான் குழுமத்தின் தலைவரான அர்டி எஸ். ஹார்ட்ஜோ தமது தொடக்கவுரையில் குறிப்பிட்டார்.
இன, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் இளையர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார் அவர்.
சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால் தவறான தகவல் பரவும் அபாயம் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
“இருந்தாலும் நமது இளையர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உண்மையில்லாத, பாகுபாடுகளை பகுத்தறிந்து அவற்றை எதிர்த்து அவர்கள் நிற்பார்கள் என நம்புகிறேன். தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களை இளையர்கள் நன்மைக்காகவே பயன்படுத்துவார்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாகியான அன்பரசு ராஜேந்திரன், சிங்கப்பூர் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் பாராட்டவும் இளைய தலைமுறைக்கு தளங்கள் இருப்பது முக்கியம் என்று வலியுறுத்தினார்.
“தற்போதைய சமய, இன நல்லிணக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டு அனைத்து சிங்கப்பூரர்களையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உறுதிசெய்ய நமது இளையர்களுக்கு வழிகாட்ட வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்
தை ஹுவா குவான் ஒழுக்கநெறி அமைப்பு மற்றும் அதன் ஐந்து பங்காளித்துவ அமைப்புகளான சமய நல்லிணக்க நிறுவனம், யாயாசான் மெண்டாக்கி, சிண்டா, யுரேசியர்கள் சங்கம், சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் ஆகியவை இன, சமய நல்லிணக்கக் கொண்டாடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

