பாசிர் ரிஸ் 8ல் உள்ள 710 சதுர அடி கொண்ட ஈரறை தனியார் அடுக்குமாடி வீடு ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் 1.49 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது.
அதாவது ஒரு சதுர அடியின் விலை $2,101. இது, 2021ஆம் ஆண்டின் தொடக்க விலையைவிட 37 விழுக்காடு அதிகமாகும்.
இதற்கு முக்கிய காரணம், பல அடிப்படை வசதிகளுடன் இந்தத் தனியார் அடுக்குமாடி வீடு இணைக்கப்பட்டிருந்து.
இத்தகைய வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டவுடன் விலை மடமடவென அதிகரித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தரவுகள் மூலம் கண்டறிந்தது.
பாசிர் ரிஸ் 8ல் உள்ள தனியார் அடுக்குமாடி வீடுகளும் அண்மையில் திறக்கப்பட்ட பாசிர் ரிஸ் கடைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டில் இங்குள்ள இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு 1.09 மில்லியன் வெள்ளி அல்லது ஒரு சதுர அடி 1,537 வெள்ளிக்கு விற்கப்பட்டது.
சொத்து மேம்பாட்டாளர்களுக்கு இது உற்சாகத்தை அளித்தது. அதிக வரவேற்பு கிடைத்ததும் வீடு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட அதே வாரயிறுதியில் ஒரே நாளில் ஆறு முறை வீட்டின் விலையை சொத்து மேம்பாட்டாளர்கள் உயர்த்தினர்.
சில்லறைக் கடைகள் மற்றும் போக்குவரத்து மையங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வசதியாக இருப்பதால் இத்தகைய வீடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்று சொத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
குடியிருப்புகள், வணிக மற்றும் சில்லறைக் கடைகளை இணைத்து, சில சமயங்களில் எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் அல்லது எம்ஆர்டி நிலையங்களுக்கு மேல் அமைந்திருப்பதால் இதுபோன்ற ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாடுகள் அண்மைய ஆண்டுகளாக பிலபலமடைந்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஈஆர்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான இயூஜின் லிம், வீட்டுக்கு அருகிலேயே எம்ஆர்டி நிலையம், கடைத் தொகுதி எனப் பயன்பாடுகளுக்கான வசதிகள் இருப்பதால் வீடு வாங்குவோரை பெரிதும் ஈர்க்கிறது என்று கூறினார்.
குஷ்மன் அண்ட் வேக்ஃபீல்டின் சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஆய்வின் தலைவர் வோங் ஸியான் யாங், பல வசதிகள் கலந்த வீடுகள் மற்ற வீடுகளைவிட மிஞ்சிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
2023 ஜனவரி முதல் 2024 மே வரையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட தனியார் அடுக்குமாடி பெரும் திட்டங்களில் (நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள்) பல வசதிகளை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டங்களில், முதல் மாதத்திலேயே ஒரே வகையான பயன்பாடு வீடுகளுடன் (39%) ஒப்பிடும்போது 47 விழுக்காடு வீடுகள் விற்கப்பட்டதை திரு வோங் சுட்டிக்காட்டினார்.
புரோப்நெக்ஸ் தலைமை நிர்வாகியான இஸ்மாயில் கஃபூர், இதுபோன்ற குடியிருப்புத் திட்டங்களில் வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டவுடன் அதிக அளவு விற்கப்படுவது பொதுவானது அல்ல என்றார்.
அண்மைய ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பல பயன்பாடு மேம்பாடுகள் விற்பனைக்கு வெளியிட்டவுடன் 70 முதல் 80 விழுக்காடு வீடுகள் விற்கப்பட்டதாக அவர் கூறினார்.
பாசிர் ரிஸ் 8 குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டவுடன் 85 விழுக்காடு வீடுகள் விற்று முடிந்தன.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள மற்றொரு பல வசதிகளை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டம், ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்துடனும் வெஸ்ட்கேட், ஐஎம்எம், ஜெம் போன்ற கடைத் தொகுதிகளுடனும் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டில் இது, விற்பனைக்கு வெளிவந்தவுடன் 88 விழுக்காடு வீடுகள் விற்று முடிந்தன.
முந்தைய ஜேகியூப் கடைத் தொகுதி மீது 323 வீடுகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பு மேம்பாடு கட்டப்பட்டது.


