சிங்கப்பூரில் வேலை செய்யும் சிட்டி குழும ஊழியர்களின் எண்ணிக்கை 500 குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் சிட்டி தனது வர்த்தகக் கட்டமைப்பை மறுசீரமைத்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது. மறுசீரமைப்பு நடவடிக்கைகள், மேலும் வேகமாக முடிவெடுக்கவும் சிங்கப்பூருக்கும் இந்த வட்டாரத்துக்கும் இடையே இடம்பெறும் பணம், வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேலும் நன்றாகக் கவனிக்க வகைசெய்வதாகவும் சிட்டி குழுமம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் தற்போது 8,000 பேர் சிட்டிக்கு வேலை செய்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அவர்களில் முழுநேர ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோர் ஆகியோர் அடங்குவர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 8,500ஆக இருந்தது. ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான சில நிர்வாகப் பொறுப்புகளை அந்நிறுவனம் அகற்றியது. அதன் செயல்பாடுகளை சீரமைக்கும் முயற்சிகளில் ஓர் அங்கமாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வட்டார அளவில் பயனர்களைக் கவனித்துக்கொள்வதற்கான பொறுப்புகளும் அகற்றப்பட்டவற்றில் அடங்கும். பல்வேறு சந்தைகளில் சிட்டி, பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகளைக் கைவிட்டது அதற்குக் காரணம்.
சிட்டி ஊழியர்கள் சிலர், அக்குழுமத்தின் புதிய அனைத்துலகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிங்கப்பூருக்கான அதன் அதிகாரி டிபோர் பாண்டி தெரிவித்தார். சிங்கப்பூர், சிட்டி தொடர்ந்து பெரிய அளவில் செயல்படும் சந்தைகளில் ஒன்றாக விளங்கும் என்றும் திரு பாண்டி கூறினார்.