ஈராண்டுகளில் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப, தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை ஒன்றுசேர்ந்து உருவாக்கும் நோக்கில் சிங்டெல் நிறுவனம், தென்கொரியாவின் எஸ்கே டெலிகாம் (எஸ்கேடி) நிறுவனத்துடன் இணக்கக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தக் கூட்டு முயற்சி, புத்தாக்கம், கட்டமைப்புச் செயல்பாட்டையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு மெருகூட்டும்; மேலும், இதன் மூலம் பயனீட்டாளர்கள் மேம்பட்ட அனுபவத்தைப் பெறுவர் என்று சிங்டெல் திங்கட்கிழமையன்று (ஜூலை 8) தெரிவித்தது. உலகளவில் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தப் பங்காளித்துவம் முக்கியத்துவம் வாய்ந்த முதல் படி என்று எஸ்கேடியின் தகவல் தொலைத்தொடர்புக் கட்டமைப்புத் தலைவர் காங் ஜோங்-ரியோல் கருத்துரைத்தார்.
இணக்கக் குறிப்பின்கீழ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களை ஆராய இரு நிறுவனங்களும் எண்ணம் கொண்டுள்ளன.
“எஸ்கேடியுடன் இணைந்து எங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி இத்துறையில் புத்தாக்கத்தை ஊக்குவித்து 6ஜி கட்டமைப்புக்குத் தயார்படுத்திக்கொள்ள எண்ணம் கொண்டுள்ளோம்,” என்றார் சிங்டெல் சிங்கப்பூரின் வர்த்தக மேம்பாட்டுத் தலைமை நிர்வாக அதிகாரியும் துணைத் தலைமை நிர்வாகியுமான ஆனா யிப்.