ஜோகூர் பாரு: ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடியில் சிங்கப்பூரில் பதிவான கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
மலேசியச் சோதனைச்சாவடியிலிருந்து சிங்கப்பூருக்கு வெளியேறும் தடத்தில் இருந்தபோது அந்த காரில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்ததைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் வலம் வந்தது.
அந்த காருக்கு அருகில் இருந்த குறைந்தது மூன்று முனையங்கள் மூடப்பட்டன.
இந்தச் சம்பவம் ஜூலை 8ஆம் தேதி இரவு 8.15 மணி அளவில் நிகழ்ந்ததாக ஜோகூர் காவல்துறை கூறியதாக மலேசிய நாளிதழான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
தீப்பற்றி எரிந்த காரின் 31 வயது ஓட்டுநரும் அதில் பயணம் செய்த 32 வயது பயணியும் காயமின்றி தப்பியதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டது.
தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பாளர்கள் ஏறத்தாழ 25 நிமிடங்கள் போராடி தீயை அணைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
கார் தீப்பிடித்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.
தீச்சம்பவம் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பு மதிப்பிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
காரின் இயந்திரம் தீப்பிடித்திருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.
அங்கிருந்து தீ, காரின் மற்ற பாகங்களுக்கு மிக விரைவாகப் பரவியதாகவும் வாகனத்தின் 60 விழுக்காடு சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.