ஈசூன் கார்ப்பேட்டையின் உச்சியில் தற்காலிக கோழிப் பண்ணை

ஈசூன் கார்ப்பேட்டையின் உச்சியில் தற்காலிக கோழிப் பண்ணை

2 mins read
e8d24574-da53-4c74-9503-1778a9ee7b60
மரப்பலகைகளாலும் இரும்புக் கம்பிகளாலும் அந்தக் கோழி கூடு அமைக்கப்பட்டிருந்தது. - படங்கள்: சாவ் பாவ்

ஈசூன் கட்டடத்தின் உச்சியில் உள்ள சமூக தோட்டத்தில் ஒரு தற்காலிக கோழிப் பண்ணையை அமைத்த அதன் உரிமையாளர்களுக்கு அங்குள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து எதிர்பார்த்த வரவேற்பு கிட்டவில்லை.

ஈசூன் அவென்யூ 11, புளோக் 429 பலமாடி கார் நிறுத்துமிடத்தில் உச்சியில் உள்ள அந்தப் பண்ணையில் கோழிகளின் சத்தம், சுகாதார பிரச்சினைகள் ஆகியவை தொடர்பில் கிளம்பிய புகார்களால் அந்தப் பண்ணை ஜூலை 4ஆம் தேதி மூடப்பட்டது.

சென் எனப் பெயர் கொண்ட குடியிருப்பாளர் ஒருவர், ஜூன் 18ஆம் தேதியன்று கோழிகளின் சத்தம் கேட்டு அதனைப் பின்தொடர்ந்து கோழிப் பண்ணை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததாக லியன்ஹ சாவ் பாவ் சீன நாளிதழிடம் தெரிவித்தார்.

தனது புளோக்குக்குக் கீழே கோழிகளைக் காணாவிட்டாலும், புளோக் 429ன் உச்சியில் அந்தத் தற்காலிக கோழிக் கூடு இருந்ததைக் கண்டார்.

மரப் பலகைகளாலும் இரும்புக் கம்பிகளாலும் அந்தக் கூடு அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நான்கு, ஐந்து கோழிகள் சுற்றித் திரிந்ததையும் மேலும் இரண்டு கோழிகள் பிளாஸ்டிக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததையும் பார்த்தார்.

அங்கிள், அண்டி கோழிப் பண்ணை@429 என்றும் அனைவரும் கோழிகளுக்கு இரை போட வரவேற்கப்படுகின்றனர் என்றும் எழுதப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

உச்சி மாடியில் கொளுத்தும் வெயிலில் கோழிகள் திரிந்துகொண்டிருந்ததும் அவை சுற்றி வர போதிய இடம் இல்லாததும் தனக்கு கவலையளித்ததாகக் குறிப்பிட்ட திரு சென், அது குறித்து நீ சூன் நகர மன்றத்திடம் புகார் அளித்தார்.

குடியிருப்பாளர்கள் அளித்த புகார்களின் பேரில், அந்தக் கோழிகளின் உரிமையாளர்கள் அவற்றை உரிய இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது என்றார் அந்த சமூக தோட்டத்தின் பிரதிநிதியான ஹு சியூமெய்.

அங்கிருந்த கோழிகள் ஜூலை 4ஆம் தேதியன்று தனியார் பண்ணைக்கு மாற்றப்பட்டன என்று நீ சூன் நகர மன்றம் மதர்ஷிப் செய்தித் தளத்திடம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்