மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் ‘போதையில்லா சிங்கப்பூரை’ உருவாக்கும் செயல் திட்டக் கருத்தரங்கு ஜூலை 10ஆம் தேதி சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது.
அதில் அமைச்சுகளுக்கு இடையிலான இளையர்களுக்குரிய போதைப்பொருள் தடுப்புக் குழுவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து வழிநடத்தவுள்ள போதைத் தடுப்புக் கல்வி / விழிப்புணர்வு முயற்சிகள் குறித்து விவரிக்கப்பட்டது.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும், அமைச்சுகளுக்கு இடையிலான இளையர்களுக்குரிய போதைப்பொருள் தடுப்புக் குழு, போதையில்லா சிங்கப்பூர் திட்ட ஆர்வலர்கள், சமூகப் பங்காளிகள், ஆதரவாளர்கள் என ஏறத்தாழ 600 பேர் கலந்துகொண்டனர்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுடன் சிங்கப்பூர்ச் சிறைச் சேவை, ஹோம் டீம் அறிவியல், தொழில்நுட்ப அமைப்புகள் (HTX) இணைந்து தலைமுடியைக் கொண்டு போதைப்பொருள் உட்கொண்டதை உடனடியாகக் கண்டறியும் கருவியை மதிப்பீடு செய்து வருவதாக இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
பல மாதங்களுக்குமுன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாலும் இக்கருவியைக் கொண்டு அதைக் கண்டறிய முடியும். இதன் மதிப்பீடு 2025ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் போதைப் பழக்கத்துக்கு ஆளான இளையர்கள் அதிலிருந்து மீண்டு வந்த கதை, போதைப் பழக்கம் உள்ள இளையர்களுக்குக் குடும்பமும் சமூகமும் தர வேண்டிய ஆதரவு, இளையர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் காக்க ஆசிரியர்கள் உள்ளிட்டோர் செய்ய வேண்டியவை பற்றிய காணொளி திரையிடப்பட்டது.
சிங்கப்பூரில் இவ்வகைப் போதைத் தடுப்புத் திட்டங்கள் மேற்கொள்வதற்கான அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
போதைப்பொருள் குறித்தும் அதைக் கண்டறியும் விதம் குறித்தும் விளக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து சிறு நாடகம் மூலம் விவரிக்கப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சிறப்பாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிய டாக்டர் ஃபைஷல், கடந்த ஆண்டு மட்டும் இப்பிரிவு 25 போதைப்பொருள் கும்பல்களைத் தடுத்துள்ளதுடன், ஏறத்தாழ $15 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் விநியோகத்தைக் கையாள்வதுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நல்வாழ்வளிக்கவும் அவர்களைச் சமூகத்தில் ஒருங்கிணைக்கவும் ஆதரவாக இருப்பதும் முக்கியம் என்றார்.
போதைப் பழக்கத்துக்கு ஆளாவோரின் வயது குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் 16 வயதுக்குக் கீழுள்ள 16 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் போதைப்பொருள் உட்கொள்வது தவறில்லை எனும் மனப்பாங்கு இளையர்களிடையே அதிகரித்துள்ளது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
உலகளவில் அதிகரித்துவரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்துப் பேசிய டாக்டர் ஃபைஷல், போதைத் தடுப்பு வழிமுறைகளுடன் சமூக அக்கறையும் ஆதரவும் இந்த ஒழிப்பு முயற்சிக்கு அவசியம் என்றார்.
இதனை ஒரு குழுவால் மட்டும் செய்ய இயலாது என்றும் பெற்றோர், ஆசிரியர்கள், சமூகப் பங்காளிகள், பொதுமக்கள் என அனைவரும் இளையர்களுக்கு சரியான வழிகாட்டியாக அமைந்து போதையில்லா சிங்கப்பூரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
போதைப் பழக்கத்திலிருந்து மீண்டுள்ள இளையர்களுக்கு போதைத் தடுப்பு ஆலோசனை வழங்கி வரும் திரு கோபால் மோஹே, இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தடுப்பு முறைகள் குறித்து பல சமூக ஆர்வலர்களுடன் விவாதித்து, அவற்றை மேம்படுத்த வாய்ப்பு கிடைப்பதாகக் கூறினார்.
இதில் கலந்துகொண்ட சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தின் பேச்சாளர், பள்ளி மாணவர்களுக்கு போதைப் பழக்கம் குறித்த கல்வி புகட்டும் முயற்சியில் ஈடுபட்டுவரும் சங்கம், பல அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டால் தடுப்பு வழிமுறைகள் இன்னும் சிறப்பாக அமையும் என்றார்.
மக்கள் கழக இளையர் அணியில் தொண்டூழியம் புரிந்துவரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர் சாகுல் ஹமீது, “போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கு மறுவாய்ப்பளிக்க வேண்டும் என நம்புகிறேன். அதுகுறித்த விழிப்புணர்வும் மக்களிடம் சென்றுசேர வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.
விழிப்புணர்வு நடவடிக்கைகள்
போதைப் பழக்கத்தின் தீங்குகளை இளையர்களுக்கும் இளம்பருவத்தினருக்கும் தெரியப்படுத்துவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தீவெங்கிலும் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. போதைப்பொருளின்றி இருப்பதற்கான வாக்குறுதியையும் மக்களிடம் அது கொண்டுசேர்த்து வருகிறது. இதுவரை அதற்கு இணையம்வழி 95,000 பேர் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
ஆண்டிறுதியில் பெற்றோருக்கான மாநாடு நடத்தப்படுவதுடன் அதில் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மீண்டவர்களின் பெற்றோர், தங்கள் அனுபவங்களையும் வழிமுறைகளையும் பகிரவுள்ளனர்.
‘கேம்பஸ் லெஜண்ட்ஸ்’ எனும் இணைய விளையாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.