சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்க மாதத்தை முன்னிட்டு, தேசிய மரபுடைமைக் கழகம் ஜூலை 13, 14ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை ‘நமது தெம்பனிஸ் நடுவத்தில்’ பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை நிலையங்களான இந்திய மரபுடைமை நிலையமும் மலாய் மரபுடைமை நிலையமும் சன் யாட் சன் நன்யாங் நினைவு மண்டபமும் யுரேஷியர் சங்கமும் இணைந்து ‘அரவணைப்போம், நல்லிணக்கத்தைக் கொண்டாடுவோம்’ எனும் நிகழ்ச்சியை முதன்முறையாக நடத்தவுள்ளன.
ஜூலை 9ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் முன்னோட்டத்தில், தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை நிறுவன இயக்குநரான செரில் கோ, நிகழ்ச்சி பற்றி விரிவாகக் கூறினார்.
“இவ்வாண்டின் இன நல்லிணக்கக் கொண்டாட்டங்களின் சிறப்பு, சமய நல்லிணக்கத்தை அரவணைக்கும் கருப்பொருளே. நம் அனைவரின் வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் உணர்ந்து, அவற்றைக் கொண்டாடுவது முக்கியம் என்பதால் இந்தத் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்தோம்,” என்றார் அவர்.
கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக ‘மனித நூலகம்: அரும்பொருளக அறிஞரைச் சந்தியுங்கள்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அரும்பொருளகங்களில் பணிபுரியும் காப்பாளர்கள், திட்டமிடுபவர்கள், சேகரிப்பு மேலாண்மை அதிகாரிகள் முதலியவர்களிடம் உரையாடி, திரைக்குப் பின்னால் நடப்பவற்றைப் பற்றி அறிய பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
“சமூகத்தை மையமாகக் கொண்ட அரும்பொருளகம் ஒன்றில் காப்பாளரான எனக்கு, சேகரிப்புகள், கண்காட்சிகள் மூலம் நமது சமூகத்தின் வளமான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் குரலையும் பிரதிநிதிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தின் துணைக் காப்பாளர் பா.லிவிண்யா, 29.
“இந்நிகழ்ச்சியின்வழி பொதுமக்கள் நேரடியாக எங்களுடன் கலந்துரையாடி, எங்கள் பணி, பொறுப்பு, தனிப்பட்ட அன்றாட அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றிய நுண்ணறிவைப் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
“மேலும், இளையர்களுக்கு அரும்பொருளகத் துறையிலுள்ள வெவ்வேறு தொழில்களை அறிமுகப்படுத்தி, அடுத்த தலைமுறை அரும்பொருளக நிபுணர்களை உத்வேகப்படுத்தும் எண்ணத்தோடும் இந்த நிகழ்ச்சி தயார்செய்யப்பட்டுள்ளது,” என்றும் கூறினார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய மரபுடைமை நிலையத்தின் சேகரிப்பு, கண்காட்சிப் பிரிவு மேலாளர் தான்யா சிங், தனது வேலையின் தொழில்நுட்ப அம்சங்களையும் கலை அம்சங்களையும் விவரித்தார்.
“ஒரு கண்காட்சியை உயிர்ப்பிப்பதில், வடிவமைப்பு முதல் சமயப் பொருள்களை கவனமாக காட்சிப்படுத்துவது வரை அனைத்தையும் உள்ளடக்கியது. இதில் அறிவியலும் கலையும் உள்ளது. உதாரணத்திற்கு, கலைப்பொருள்கள் முறையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் கண்காணிக்க தரவுப் பதிவுகளைப் பயன்படுத்துவோம்,” என்று அவர் சொன்னார்.
“நமது மரபுடைமை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது, அது இறக்கவில்லை. சிங்கப்பூரை அமைக்கும் பல்வேறு கலாசாரங்களைப் பற்றிய ஆழமான புரிதலும் மதிப்பும் பார்வையாளர்களிடையே நிலவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று செல்வி செரில் மேலும் கூறினார்.
வரும் வாரயிறுதியில் கதை சொல்லும் நிகழ்ச்சிகள், கலாசார சமையல் பட்டறைகள், பயணக் கண்காட்சி, சமூக சுவரோவியப் பட்டறை ஆகியவை ‘நமது தெம்பனிஸ் நடுவத்தில்’ இடம்பெற உள்ளன.
சனிக்கிழமை (ஜூலை 13) உள்ளூர் நட்சத்திரங்களையும் பல்வேறு இன கலாசார இசை, நடன, தற்காப்புக் கலை குழுக்களையும் கொண்ட கச்சேரி நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவுள்ளது.
அனைவருக்கும் அனுமதி இலவசம். குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு நுழைவுச்சீட்டு தேவை. மேல் விவரங்களுக்கு https://go.gov.sg/nhbracialharmony என்ற இணையத்தளத்தை நாடலாம்.

